மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

அரியர் தேர்வு ரத்து: உயர் நீதிமன்றம் மறுப்பு!

அரியர் தேர்வு ரத்து: உயர் நீதிமன்றம் மறுப்பு!

அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

கடந்தாண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கல்லூரிகள் மூடப்பட்டது. தேர்வுகளை நடத்துவதில் சிக்கலும் ஏற்பட்டது. இதையடுத்து, அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் இன்று(ஏப்ரல் 7) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “ தமிழக அரசின் இந்த அரசாணைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம், சட்டப்படிப்பு, விவசாய படிப்பு, மருத்துவ படிப்பு, ஆசிரியர் படிப்புகளை நிர்வகிக்கும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தேர்வுகள் நடத்தப்பட்டது. பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின் அடிப்படையிலேயே கலை, அறிவியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் ஜூலை 7 ஆம் தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட விதிகளின்படி, எளிய நடைமுறையில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தல் வழங்கியதாகவும், தேர்வு நடத்த வேண்டாம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த தமிழ்நாடு அரசின் உத்தரவை ஏற்க இயலாது என கூறினர். மேலும், கல்வியின் புனிதத்தில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது. ஏதேனும் ஒரு தேர்வு நடைமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் கலந்து பேசி ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்கள்? உள்ளிட்டவை குறித்து பல்கலைக்கழக வாரியாக முழு விவரங்களை தாக்கல் செய்யுமாறும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

புதன் 7 ஏப் 2021