உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா

public

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாகச் செயல்பட்டு வருபவர் எஸ்.ஏ.போப்டே. இவர் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். போப்டேவின் பதவி காலம் வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது என்பது குறித்து பரிந்துரை அளிக்கும்படி தற்போதைய தலைமை நீதிபதியான போப்டேவுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் அனுப்பினார்.

இதற்கு, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி. ராமணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி போப்டே பரிந்துரை செய்து அனுப்பினார்.

போப்டேவுக்கு அடுத்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவர் என்.வி.ரமணா. ஆகவே, தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்தார். தற்போது பரிந்துரை ஏற்கப்பட்டு என்.வி.ரமணா உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். புதிதாகப் பதவியேற்க உள்ள என்.வி. ரமணா 2022 ஆகஸ்ட் மாதம் வரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியில் இருப்பார்.

ஆந்திரப்பிரதேசத்திலிருந்து தலைமை நீதிபதியாக வரும் முதல் நீதிபதி ரமணா என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தில் மிக மூத்த நீதிபதியாக இருக்கும் என்.வி.ரமணா, கடந்த 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆந்திரப்பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பொன்னாவரம் எனும் கிராமத்தில் எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வழக்கறிஞராக என்.வி.ரமணா தன்னை பதிவு செய்து கொண்டார்.

ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தில் 2000ஆம் ஆண்டு ஜூனில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 2014ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது அங்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் காஷ்மீரில் இணையதள சேவை முடக்கப்பட்டதை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அமர்வில் என்.வி. ரமணாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *