மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

நிரம்பும் மருத்துவமனைகள்... பாதிக்கப்படும் இளைஞர்கள்!

நிரம்பும் மருத்துவமனைகள்... பாதிக்கப்படும் இளைஞர்கள்!

தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் இளைஞர்களை அதிகளவில் தாக்குகிறது என்றும் இதனால் மருத்துவமனைகள் விரைவாக நிரம்பி வருவதாகவும் சொல்லப்படும் நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏப்ரல் 8ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா என்ற ஒன்றையே மறந்து சமூக இடைவெளியையும் முகக்கவசத்தையும் துறந்து மக்கள் தேர்தல் பரபரப்புகளில் மூழ்கியிருக்கும் நேரத்தில் சத்தமில்லாமல் தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது கொரோனா.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையும் அதையொட்டி வரும் தகவல்களும் அச்சமூட்டுகின்றன. தடுப்பூசி ஓரளவுக்குக் கைகொடுத்தாலும் மக்கள் தற்போது விழித்துக் கொள்ளவில்லையெனில் மீண்டும் நிலைமை மோசமாகும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.

தற்போதுள்ள சூழல் குறித்து விரிவாகப் பேசியுள்ள மருத்துவ நிபுணர்கள், “இப்போது பரவிவரும் கொரோனா வைரஸ் இளைஞர்களை அதிகளவில் தாக்குகிறது. முன்பு வயதானவர்கள் பத்து பேர் பாதிக்கப்பட்டால் இளைஞர்கள் ஒன்றிரண்டு பேர்தான் பாதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது அப்படியில்லை. வயதானவர்கள் பத்து பேர் பாதிக்கப்பட்டால் ஐந்து அல்லது ஆறு இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட முதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சமமான அளவில் இருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம்” என்று எச்சரிக்கின்றனர்.

மேலும், “குறிப்பாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் கொரோனா தொற்றை அதி வேகமாகப் பரப்புகின்றனர். அவர்களை ‘Super Spreaders’ என்று அழைக்கிறோம். அவர்களுக்குப் பெரியளவில் பாதிப்பு ஏற்படாவிட்டாலும் அவர்களோடு தொடர்பிலிருக்கும் வயதானவர்களுக்கு ஆபத்து இருக்கிறது. கொரோனா வைரஸ் இப்போது இளைஞர்களை அதிகமாகத் தாக்குவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று, இவர்கள் மிகவும் அலட்சியமாக இருப்பது. வெளியில் செல்வதற்கான நிறைய வாய்ப்புகள் இருப்பதால் யாரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. கை கழுவுவதையும், முகக்கவசம் அணிவதையும் மக்கள் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை. இரண்டாவது, வைரஸ் வேகமாக உருமாறிக்கொண்டிருப்பது.

சுமார் 200 வகையான உருமாறிய கொரோனா வைரஸ்கள் தற்போது இந்தியாவில் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட சில வேரியன்ட்கள் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவுகின்றன.

என்னென்ன வகையான கொரோனா வைரஸ்கள் இப்போது பரவி வருகின்றன, அவை என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அரசாங்கம்தான் கண்டுபிடித்து நமக்குச் சொல்ல வேண்டும். தற்போது யூ.கே வேரியன்ட் மற்றும் தென்னாப்பிரிக்கா வேரியன்ட் இந்தியாவில் பரவியிருப்பதாகச் சொல்லியிருக்கின்றனர். வேறு என்னென்ன வேரியன்ட்கள் பரவி இருக்கின்றன என்பது முழுமையாகத் தெரியவில்லை” என்று கவலைப்படுபவர்கள்,

தொடர்ந்து, “பல மாநிலங்களில் தேர்தல் நடந்துகொண்டிருப்பதால் அதற்கான ஆய்வுகளை செய்யாமல் இருக்கிறார்களா அல்லது ஆய்வு செய்துவிட்டு முடிவுகளை வெளியிடாமல் உள்ளார்களா எனத் தெரியவில்லை. அதை ஆய்வு செய்யாமலிருந்தால் அது பிரச்னைதான். ஆய்வு செய்தால்தான் அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

ஏனெனில், முன்பைவிட தற்போது கொரோனா பரவலின் வேகம் அதிகரித்திருக்கிறது. பழையபடி மருத்துவமனைகளெல்லாம் வேகமாக நிறைகின்றன. முன்பு பரவிய கொரோனா வைரஸ் இரண்டு வாரத்திலிருந்து மூன்று வாரத்தில் அறிகுறிகளை வெளிக்காட்டும். ஆனால், இப்போது பரவும் கொரோனா வைரஸ் ஒரு வாரத்திலேயே காட்டுகிறது. இதில் ஒரே ஆறுதல் உயிரிழப்புகள் முன்பைவிட குறைவாக இருக்கின்றன என்பது மட்டும்தான். ஆகவே முன்பு லாக்டெளன் ஆரம்பித்த காலத்தில் நாம் எப்படி கட்டுப்பாட்டுடன் இருந்தோமோ... அதேபோல இப்போதும் பின்பற்ற வேண்டும். அலட்சியமாகக் கடந்து சென்றால் மீண்டும் கடினமான சூழல் உருவாகக்கூட வாய்ப்பிருக்கிறது. எனவே அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்கிறார்கள் தொற்றுநோய் மருத்துவர்கள்.

இதுகுறித்து, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர், மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், “மருத்துவமனைகள் விரைவாக நிரம்பி வருவதாகச் சொல்லப்படும் தகவல் உண்மைதான். ஓமந்தூரார் மருத்துவமனையில் இடமில்லாத சூழல் நிலவுவதாகவும் எழும்பூர் கண் மருத்துவமனையில் 300 படுக்கைகள் தயார்ப்படுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆகையால், பல இடங்களில் மருத்துவமனைகள் பழையபடி நிரம்ப ஆரம்பித்துள்ளன. அதேபோல பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது.

ராமேஸ்வரம், சாத்தூர், சென்னை மேடவாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளிலெல்லாம் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக ஓரிரு தினங்களுக்கு முன்பு தகவல் வந்தது. கூடுதல் படுக்கைகள் ஒதுக்குவது, வென்டிலேட்டர் வசதிகள் போதுமான அளவில் இருப்பதை உறுதிப்படுத்துவது, தடுப்பூசி தடையின்றி கிடைக்கச் செய்வது ஆகிய பணிகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் களைத்துப்போய்விட்டார்கள். கூடுதலாக மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமனம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தமிழகம், மகாராஷ்டிரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏப்ரல் 8ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.

-ராஜ்

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

செவ்வாய் 6 ஏப் 2021