யானைகள் வருகை: பலாக்காய்கள் அகற்றம்; மூங்கில் வளர்ப்பு தீவிரம்!

public

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க கூடலூர் பகுதியில் மரங்களில் விளைந்துள்ள பலாக்காய்கள் வெட்டி அகற்றப்படுகிறது. அதேநேரம், ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் காட்டுயானைகளின் உணவுக்காக வனத்துறை சார்பில் மூங்கில் மரங்கள் வளர்ப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. உணவு மற்றும் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலங்களை தேடி ஊருக்குள் அதிகளவில் வருகின்றன. இதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கூடலூர் பகுதியில் உள்ள மரங்களில் பலாக்காய்கள் அதிகளவில் விளைந்து இருக்கிறது. இதை தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் பலாக்காய்கள் பழுத்துவிட்டால், காட்டுயானைகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை கருத்தில்கொண்டு காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடலூர் வனக்கோட்ட பகுதியில் மரங்களில் விளைந்துள்ள பலாக்காய்களை வனத்துறையினர் வெட்டி அகற்றி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தங்களது வீட்டு தோட்டத்தில் விளைந்துள்ள பலாக்காய்களையும் வெட்டி அகற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள வனத்துறையினர், “காட்டுயானைகளுக்கு மிகவும் பிடித்தமான தீவனமாக மூங்கில், பாக்கு, தென்னை, வாழை, பலா உள்ளது. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், பசுந்தீவன தட்டுப்பாடு காணப்படுகிறது. இதனால் உணவு தேடி காட்டுயானைகள் ஊருக்குள் வருகிறது.

இன்னும் சில வாரங்களில் பலாப்பழங்கள் சீசன் தொடங்கிவிடும். அப்போது ஊருக்குள் வரும் காட்டு யானைகள் மீண்டும் வனத்துக்குள் செல்லாமல் இங்கேயே தொடர்ந்து முகாமிட வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க முன்கூட்டியே பலாக்காய்களை வெட்டும் பணி நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் காட்டுயானைகளில் உணவுக்காக வனத்துறை சார்பில் மூங்கில் மரங்கள் வளர்ப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகளின் முக்கிய உணவு மூங்கில், மரப்பட்டைகள், புளி உள்பட பல்வேறு தாவரங்களை விரும்பி உண்ணுகின்றன. தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் காட்டு யானைகளின் உணவுக்காக ஆசிய யானைகள் திட்டத்தின்கீழ் பெத்தேல்புரம் பீட்டில் 1,500 பீமா மூங்கில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை ஒட்டன்சத்திரம் வனச்சரக ஊழியர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *