மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

தொழிலாளிகளைத் தரையில் படுக்க வைத்து சிகிச்சை!

தொழிலாளிகளைத் தரையில் படுக்க வைத்து சிகிச்சை!

குஜராத்தில் மோர்பி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்புள்ள தொழிலாளர்களுக்குத் தொழிற்சாலையின் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி மாவட்டத்தில் பீங்கான் பொருட்கள் உற்பத்தி பிரதானமான தொழில் ஆகும். இந்தியாவில் தயாரிக்கப்படும் சிஎப்எல் மின்விளக்குகள் உற்பத்தியில் 80 விழுக்காடு வரை மோர்பி நகரத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. மோர்பி, சுவர் கடிகார உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பல இடங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன. இதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், சிலருக்கு போதிய வசதிகள் கிடைப்பதில்லை.

இந்த நிலையில், பீங்கான் தொழிலில் முன்னணியில் இருக்கும் மோர்பி நகரத்தில் மக்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லை. இதுகுறித்து வெளியான அந்த வீடியோவில், டைல்ஸ் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் குறிப்பிட்ட இடைவெளியுடன் தரையில் படுக்க வைத்து ட்ரிப்ஸ் ஏற்றப்படுகிறது. இரண்டு பேர் அதை மேற்பார்வை செய்கின்றனர். ஒருவர் தேவையான மருந்துகளுடன் அமர்ந்திருக்கிறார். அவர்கள் பக்கத்திலேயே பீங்கான் கண்ணாடி துண்டுகளும் கிடப்பதை பார்க்க முடிகிறது.

இதுகுறித்து கேப்சன் டைல்ஸ் தொழிற்சாலையின் உரிமையாளர் அருண் படேல் கூறுகையில், ”நகரத்தில் உள்ள மருத்துவமனைகளில் இடம் இல்லாத காரணத்தால், இவர்களுக்கு இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கொரோனா தொற்றில்லாத நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டாம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும்,இவர்கள் கோவிட் நோயாளிகள் அல்ல. நான்கு முதல் ஐந்து தொழிலாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததால், அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் இடமில்லாததால், அங்குள்ள மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வெளியே சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டனர். மருத்துவமனைக்குள்ளே சிகிச்சை அளிக்கப்பட்டால், அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படலாம் என தெரிவித்ததால் அங்கே அனுமதிக்கவில்லை என தெரிவித்தார்.

இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் ஜே பி படேல் கூறுகையில், “மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியிருப்பதால், பள்ளியை எடுத்து அதில் 200 படுக்கைகளையும், பாலிடெக்னிக் கல்லூரியில் 300 படுக்கைகளையும் உருவாக்க உள்ளோம். அதன்பிறகு, இந்த பிரச்சனை இருக்காது.

மோர்பியில் மொத்தம் 200 படுக்கைகள் வசதிகள் கொண்ட நான்கு கோவிட் மருத்துவமனைகள் உள்ளன, அவற்றில் 180 க்கும் மேற்பட்ட படுக்கைகள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளன. மோர்பி சிவில் மருத்துவமனை, துணை மாவட்ட மருத்துவமனை மற்றும் ஒரு தனியார் மருத்துவமனை ஆகியவை தற்போது கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன” என கூறினார்.

வினிதா

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 6 ஏப் 2021