மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

நக்சலைட் தாக்குதல்: 22 வீரர்கள் மரணம்!

நக்சலைட் தாக்குதல்: 22 வீரர்கள் மரணம்!

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது என பீஜப்பூர் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்காரின் தண்டேவாடா, பிஜாப்பூர், சுக்மா உள்ளிட்ட மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இவர்களை ஒடுக்க, சிறப்பு அதிரடிப்படைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், சுக்மா - பிஜாபூா் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்துள்ளனா்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயம் அடைந்த 31 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த 21 வீரர்களைக் காணவில்லை என பிஜாப்பூர் எஸ்பி தெரிவித்துள்ளார்.

நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு நாட்டின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

”நக்சலைட்டுகளுடனான துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வீரர்களின் தியாகத்தை ஒரு போதும் மறக்க முடியாது, தேசம் என்றும் நினைவில் கொள்ளும்” என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த துயர சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது .காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும். துணிச்சலான வீரர்களின் தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தாண்டில் சத்தீஸ்கரில் நடந்த முதல் தாக்குதல் கிடையாது. ஏற்கனவே, மார்ச் 23ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்டத்தில், பாதுகாப்பு வீரர்கள் சென்ற பேருந்தை நக்சலைட்டுகள் வெடிகுண்டு வைத்து தாக்கியதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில், நவம்பர் 2020இல் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில், ஒன்பது கமாண்டோக்கள் காயமடைந்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி, நடந்த தாக்குதலில் 17 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். பிப்ரவரி 18, 2018இல் நடந்த தாக்குதலில், இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடைந்தனர். 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ல் நடந்த தாக்குதலில், 26 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

திங்கள் 5 ஏப் 2021