மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

குதிரைகளில் எடுத்து செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

குதிரைகளில் எடுத்து செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

தமிழகத்தில் உள்ள மலைவாழ் பகுதியில் வாக்கு பதிவு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

போடிநாயக்கனூர் அருகே மலைக் கிராமத்திற்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் கொட்டகுடி, குரங்கணி, கொழுக்குமலை, காரிப்பட்டி, சென்ட்ரல் ஸ்டேசன், டாப் ஸ்டேசன், போடிமெட்டு, அகமலை, ஊரடி-ஊத்துக்காடு, அலங்காரம், முந்தல், முந்தல் காலனி ஆகிய மலைக்கிராம வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 ஆயிரத்து 314 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதில் போடி அருகே உள்ள சென்ட்ரல் ஸ்டேசன், பெரியகுளம் அருகே உள்ள ஊத்துக்காடு ஆகிய மலை கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாது. சென்ட்ரல் ஸ்டேசன் வாக்குச்சாவடியில் 190 வாக்காளர்களும், ஊத்துக்காடு வாக்குச்சாவடியில் 463 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.

சென்ட்ரல் ஸ்டேசன் மலைக் கிராம வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் குரங்கணி மலை கிராமத்திற்கு லாரி மூலம் கொண்டுவரப்பட்டு பின்னர் குதிரைகள் மூலம் சென்ட்ரல் ஸ்டேசன் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டது. இப்பகுதி நக்சல் தடுப்பு பிரிவு போலீஸாரின் கண்காணிப்பில் உள்ளதால் பலத்த பாதுகாப்புடன் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

வாக்குச்சாவடி அலுவலர்களும், துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸாரும் உடன் சென்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில்

அக்னி நட்சத்திர வெயில், காலத்திலும். மாஞ்சோலை, குதிரைவெட்டி, ஊத்து மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்கள் குளிர்ச்சியாகவே காணப்படும். இங்கு ஏராளமான தனியார் தேயிலை தோட்டங்கள் இருப்பதால் நூற்றுக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் வசிக்கின்றன.

கல்லிடைக்குறிச்சியில் இருந்து மலைப்பாதையின் வழியாகச் சென்று மாஞ்சோலைக்கு செல்ல முடியும். கல்லிடைக்குறிச்சியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் இப்பகுதி உள்ளது. இங்கு தேயிலைத் தோட்ட நிர்வாகம் நடத்தும் தொடக்கப்பள்ளியும், அரசு உயர்நிலை பள்ளியும், அஞ்சலகமும் உள்ளன.

இந்த பகுதி அம்பை சட்டமன்ற தொகுதியின் கீழ் வருகிறது. இங்கு மொத்தம் 2 ஆயிரத்து 113 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1, 048 ஆண் வாக்காளர்கள், 1,065 பெண் வாக்காளர்கள் அடங்குவர். இங்கு 3-ம் பாலினத்தவர்கள் கிடையாது.

இங்குள்ள மக்கள் வாக்களிக்க மொத்தம் 5 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாஞ்சோலை பி.பி.டி.சி. தொடக்கப்பள்ளியில் ஒரு வாக்குச்சாவடியும், நாலுமுக்கு மற்றும் ஊத்து பகுதியில் தலா 2 வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை வாக்குச்சாவடியில் 353 ஆண் வாக்காளர்கள், 346 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 699 பேர் வாக்களிக்க உள்ளனர்.

நாளை தேர்தலையொட்டி வாக்களிக்க மாஞ்சோலையில் வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளது. இன்று மாலை மண்டல அலுவலர்கள் தலைமையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரியில் ஏற்றப்பட்டு மாஞ்சோலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது அவர்களுடன் அங்கு பணியில் ஈடுபட உள்ள தேர்தல் அலுவலர்கள் 20 பேரும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பஸ்சில் மாஞ்சோலைக்கு சென்றனர்.

தேர்தல் நடைபெறும்போது ஒவ்வொரு வாக்குச்சாவடியின் முன்பும் வனத்துறை ஊழியர் ஒருவர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படுவார். இதேபோல் 5 வாக்குச்சாவடிகளிலும் வன விலங்குகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

வாக்குப்பதிவு முடிந்ததும் வனத்துறை ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் 20 தேர்தல் அலுவலர்களையும் பஸ்சில் ஏற்றி பாதுகாப்பாக செக்போஸ்ட் வரை கொண்டு வந்து விடுவார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்புவார்கள்.

இதேபோல் காரையாறு வனப்பகுதியில் உள்ள காணிக்குடியில் உள்ளவர்கள் வாக்களிக்க 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அரசு ஊழியர்கள் 12 பேர் பணியில் ஈடுபடுவார்கள். அவர்களும் சென்று வருவதற்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுபோல் தமிழ்நாட்டில் கொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடு மலைக்கிராமங்களில் வாக்குபதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

-சக்தி பரமசிவன்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

திங்கள் 5 ஏப் 2021