மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

மராட்டியத்தில் இரவு ஊரடங்கு அமல்; மற்ற மாநிலங்களின் நிலை?

மராட்டியத்தில் இரவு ஊரடங்கு அமல்; மற்ற மாநிலங்களின் நிலை?

மராட்டிய மாநிலத்தில் நேற்று (ஏப்ரல் 4) இரவு 8 மணி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்று மராட்டிய அமைச்சர் அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மராட்டியத்தைப் போலவே மற்ற மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை ஏற்படுமா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த சூழலில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவல் அதிகரித்துவருகிறது.

இதைத்தடுப்பதற்கான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டு பலருக்கும் செலுத்தப்படுகிறது . இது பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் முதல் இரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த நான்கு வாரங்களாக அதிகரித்து வருகிறது.

இதனிடையே நேற்று (ஏப்ரல் 4) இந்தியாவில் ஒரே நாளில் 93,249 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் மராட்டியம், டெல்லி, கோவா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் எதிரொலியாக மராட்டிய மாநிலத்தில் நேற்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இருக்கும். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். உணவுகளை எடுத்துச் செல்லுதல் மற்றும் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே உணவகங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அலுவலகங்களைப் பொறுத்தவரை, ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். தற்போதைய கட்டுப்பாடுகளுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்” என்று அமைச்சர் அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் கேபினட் செயலர், முதன்மை செயலர், சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவைக்கேற்ப மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை மாநில அரசுகளே விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதால் மராட்டியத்தைப் போலவே மற்ற மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

திங்கள் 5 ஏப் 2021