மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு மஹிந்திரா நிறுவனத்தின் பரிசு!

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு மஹிந்திரா நிறுவனத்தின் பரிசு!

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி, மக்களின் பசியைத் தீர்த்து வரும் கம­லாத்­தாள் பாட்டிக்கு மஹிந்­திரா நிறு­வ­னம் சொந்த வீடு கட்டி தர முன்வந்துள்ளது.

கோவை ஆலந்தூரை அடுத்த வடிவேலம்பாளையம் பகுதியில் வசித்து வரும் கமலாத்தாள் என்ற 85 வயதான பாட்டி, ஏழை எளிய மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் பசியைப் போக்கும் வகையில் ’ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி’ என்று விற்பனை செய்து வருகிறார். யாருடைய உதவியும் இல்லாமல், தனி ஆளாகவே இட்லி, சாம்பார், சட்னி தயாரித்து விற்பனை செய்து வருகிறார். முன்னர், ஒரு இட்லியை 25 பைசாவுக்கு விற்று வந்தார். பின்னர், விலையேற்றம் காரணமாக படிபடியாக உயர்த்தி தற்போது ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்று வருகிறார்.

பழைமை மாறாமல் ஆட்டுக்கல்லில் அரைத்து செய்யப்படும் இட்லி, சட்னியை சாப்பிட பலரும் இவரின் தினசரி வாடிக்கையாளராக மாறிவிட்டனர். ஹோட்டல் மாதிரி, நாற்காலி, மேஜை கிடையாது என்பதால் திண்ணையில்தான் உட்கார்ந்து சாப்பிட வேண்டும்.

இவருடைய ஒரு ரூபாய் இட்லி சேவை பட்டிதொட்டி எங்கும் பரவ ஆரம்பித்தது.

இந்த நிலையில், இவரது சேவையை அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியிருந்தார். அதுமட்டுமில்லாமல், சமையல் எரிவாயு அடுப்பையும் வழங்கினார்.

சொந்த இடத்தில் கொஞ்சம் பெரிய அளவில் இந்தச் சேவையை தொடர வேண்டும் என கமலாத்தாள் பாட்டி விருப்பம் தெரிவித்திருந்தார்.

தற்போது மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைப்ஸ்பேசஸ் நிறுவனம் கமலாத்தாளுக்கு சொந்தமாக நிலம் வாங்கி, அதைப் பதிவு செய்த ஆவணத்தை அவரிடம் வழங்கியுள்ளது. அந்த நிலத்தில் கமலாத்தாளுக்குக்கான வீடு மற்றும் இட்லி கடை நடத்துவதற்கான கட்டுமானத்தையும் அந்த நிறுவனம் தொடங்கியிருக்கிறது.

அதுபோன்று, கோவையைச் சேர்ந்த பார்த் கேஸ் நிறுவனம் கமலாத்தாள் பாட்டிக்குச் சமையல் எரிவாயு சிலிண்டர் இனிமேல் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் “விரைவில் இட்லி அம்மா அவர்கள் சொந்தமான ஒரு வீட்டைப் பெறுவார்” என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து கமலாத்தாள் பாட்டி, ”நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு உதவிய அவர்களுக்கு நன்றி. அவர்கள் வந்து ஒரு நில ஆவணத்தை வழங்கி, கட்டுமானத்தையும் தங்கள் செலவில் முடித்துத் தருவதாக உறுதியளித்தனர்” எனக் கூறினார்.

வினிதா

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

ஞாயிறு 4 ஏப் 2021