மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

சுங்கக்கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சுங்கக்கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தக் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வதற்கு வாய்ப்புள்ளது என்று லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 565 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் இந்தச் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவிகிதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 5 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதம் வரையில் கட்டணம் உயர்ந்துள்ளது.

கோவை கன்னியூர், திருத்தணி பட்டறை பெரும்புதூர், திருவள்ளூர் சூரப்பட்டு, வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், தூத்துக்குடி கிருஷ்ணகிரி சாலை புதூர், வேலூர் பள்ளிகொண்டா, வாணியம்பாடி மற்றும் விருதுநகரில் உள்ள எட்டூர்வட்டம், மதுரை கப்பலூர், நாங்குநேரி, புதுக்கோட்டை சிட்டம்பட்டி உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதாவது ரூ.5 முதல் ரூ.30 வரையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா நெருக்கடியில் இருந்து ஓரளவுக்கு மீண்டு வரும் நிலையில், சுங்கச்சாவடிகளின் இந்தக் கட்டண உயர்வு கூடுதல் சுமையாக இருக்கும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு லாரி உரிமையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கக் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், “தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது விதிமீறல் ஆகும். பாஸ்டேக் முறை கொண்டு வந்தால் வருவாய் உயரும் என்று தெரிவித்திருந்த மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் நடைபெறும் முறைகேடுகளையும் தடுக்க வேண்டும். சுங்கச்சாவடி கட்டண உயர்வால் லாரி வாடகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்வதற்கு வழி ஏற்பட்டுள்ளது” என்று மற்ற லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

சனி 3 ஏப் 2021