மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

கொரோனா பரிசோதனையை துரிதப்படுத்த உத்தரவு!

கொரோனா பரிசோதனையை துரிதப்படுத்த உத்தரவு!

கொரோனா தொற்று நோய் அதிகரித்து வருவதால், சுகாதாரத் துறை அலுவலர்கள் கட்டுப்பாட்டு வழிமுறைகளைத் தீவிரமாக்கவும், பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது தினசரி பாதிப்பு 3ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் 89,129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தமிழகத்தில் 3,290 ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் 714 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது அதிகரித்து வரும் கொரோனா ஏப்ரல் மத்தியில் உச்சத்தை தொட்டு,மே மாத இறுதியில் பரவல் கணிசமாக குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொரோனா தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், வேகமாகவும் பரவுகிறது. கொரோனா பரிசோதனையின் முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் முடிப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுங்கள். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களை, தொடர்ச்சியாகக் கண்காணித்து வாருங்கள். அவர்களுக்கு பாதிப்பு மோசமானால், உடனடியாக கோவிட் மையத்திற்கு மாற்றிவிடுங்கள்.

கொரோனா பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணி 72 மணி நேரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும், படுக்கை மற்றும் வென்ட்டிலேட்டர் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும்.

கொரோனா அதிகரிப்பால், எதிர்காலத்தில் நிச்சயமாக உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால், உயிரிழப்பை கட்டுப்படுத்தும் வகையில் முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். கொரோனா பரவலை கட்டுபடுத்த சுகாதாரத் துறையினருடன், காவல் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், கூடுதலாக 2.14 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும், 11.02 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் இன்று இரவு தமிழகம் கொண்டுவரப்படுகின்றன. இன்று மட்டும் மொத்தமாக 13.16 லட்சம் கொரோனா தடுப்பூசி கொண்டுவரப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் கொரோனா காலத்தில் நடைபெறுவதால்,பாதுகாப்பிற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும், தெர்மாமீட்டர், சானிடைசர், கையுறை, முழு உடல் கவச உடைகள், முகக்கவசம் உள்ளிட்ட உபகரணங்களை, 54 கோடியே 12 லட்சத்து 19 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 3 ஏப் 2021