மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

தமிழகத்தில் ரூ.406 கோடி பணம்,பொருட்கள் பறிமுதல்!

தமிழகத்தில் ரூ.406 கோடி பணம்,பொருட்கள் பறிமுதல்!

தமிழகத்தில் இதுவரை ரூ.406.78 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதியிலிருந்து பறக்கும் படையினர் வாகன சோதனையின் மூலம் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி வரை சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.406.78 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

வருமான வரித்துறையினர் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.71.75 கோடி பணமும், பறக்கும் படைகள் மூலமாக ரூ.134.52 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.3.29. கோடி மதிப்பிலான மதுபானங்கள், ரூ.2.20 கோடி மதிப்பிலான புகையிலை, கஞ்சா, ரூ.175.98 கோடி மதிப்பிலான நகைகள், ரூ.19 கோடி மதிப்பிலான சேலைகள், வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.406. 78 கோடி என்பது, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட தொகையை(ரூ.139.40 கோடி) விட 3 மடங்கு அதிகமாகும்.

திருப்பத்தூர்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப்பணியில் ஈடுபடும் காவலர்கள் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதற்காக 4 தொகுதிகளிலும் 1,371 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 154 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறுகையில், ”திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,371 வாக்குச்சாவடிகளில் 499 வாக்குச்சாவடிகளில் ஒரு மையத்துக்கு ஒரு காவலர் வீதம் 499 காவலரும், ஒரே மையத்தில் 5 வாக்குச்சாவடிகளுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள 57 வாக்குச்சாவடி மையங்களில் தலா ஒரு காவலர் வீதம் 57 காவலர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒதுக்கீட்டின்படி பணி ஆணைகள் ஏப்ரல் 4ஆம் தேதி அந்தந்த காவலர்களுக்கு வழங்கப்படும்.

எனவே, வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து முடியும் வரை மையத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

அதேபோல, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் காவலர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு, அங்கு நடைபெறும் நிகழ்வுகளை அவ்வப்போது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சிசிடிவி கேமிராக்கள் செயல்பாட்டில் உள்ளதா என்பதை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். பணியில் ஈடுபடும் காவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

சனி 3 ஏப் 2021