மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

கடும் வெயில்; கருகும் தேயிலை செடிகள்!

கடும் வெயில்; கருகும் தேயிலை செடிகள்!

அடுத்த ஐந்து நாள்களுக்குத் தமிழகத்தில் அனல் காற்று வீசும் எனவும் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி வரை உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வெயிலின் தாக்கம் நீலகிரி மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை. கூடலூர் பகுதியில் கடும் வெயிலால் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் அரசு தேயிலை தோட்டங்கள் மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஆறு மாதங்கள் பருவமழை பெய்து வருவதால், இங்கு தேயிலை உட்பட அனைத்து விவசாயமும் நடைபெற்று வருகிறது. தற்போது கோடைக்காலம் என்பதால் பகலில் கடும் வெயில் காணப்படுகிறது. வழக்கத்தைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வெளியே வரவே சிரமப்படுகின்றனர். இதேபோல் நீர்நிலைகளும் வறண்டு விட்டதால், விவசாயப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. வனப்பகுதியிலும் வறட்சி நிலவுகிறது.

இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக அந்த வறட்சியின் தாக்கம் தேயிலை தோட்டங்களிலும் காணப்படுகிறது. கடும் வெயிலால் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதே போன்று தொழிற்சாலைகளுக்கும் பச்சை தேயிலை வரத்தும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் அங்கு தேயிலைத்தூள் உற்பத்தி பாதிக்கும் அபாயம் நிலவுகிறது.

இதுகுறித்து கூடலூர் பகுதி விவசாயிகள், "தற்போது பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.22 என விலை கிடைக்கிறது. கூடலூர் பகுதியில் கடும் வெயிலாக இருப்பதால் நிலத்தின் ஈரத்தன்மை குறைந்துவிட்டது. இதன் காரணமாக தேயிலை செடிகளில் பச்சை தேயிலை மகசூல் இல்லை. மேலும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் செடிகள் கருகி வருகின்றன. தினமும் 100 கிலோ அறுவடை செய்யப்படும் இடங்களில் பாதி அளவாக மகசூல் குறைந்துள்ளது.

பெரிய தேயிலை தோட்டங்களில் கிணறுகளில் இருந்து தண்ணீர் இறைத்து ஸ்பிரிங்ளர் மூலம் செடிகளுக்குத் தெளித்து வருகின்றனர். ஆனால் சிறிய தோட்டங்களில் பாசனத்துக்கு வழியில்லை. கோடை மழை நன்கு பெய்தால் மட்டுமே தேயிலை மகசூல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" என்று கவலையுடன் கூறியுள்ளனர்.

-ராஜ்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வியாழன் 1 ஏப் 2021