மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

சிறப்புக் கட்டுரை: தேர்தல் காலத்திலாவது பேசுவோம்! - மரு.அரவிந்தன் சிவக்குமார்

சிறப்புக் கட்டுரை: தேர்தல் காலத்திலாவது பேசுவோம்! - மரு.அரவிந்தன் சிவக்குமார்

கடந்த நிதியாண்டில் தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் ரூ.31,000 கோடி என்கிறது, புள்ளிவிவரம். கொரோனா ஊரடங்கில்கூட பல ஊர்களில் ஒரு குவார்டர் 500 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக என்னிடம் சிகிச்சைக்கு வந்த குடிநோயர்கள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாகும் நிலையில், மனநல மருத்துவம் குறித்து தேர்தல் நேரத்தில்கூட சிறிதளவும் பேசப்படுவதில்லை.

கடந்த 20 ஆண்டுகளில் குறிப்பாக கடந்த 5 - 8 ஆண்டுகளில், குடிநோய்க்கான தனியார் ரீஹாப் மையங்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. குடிநீக்க சிகிச்சைக்கு இந்த மையங்களில் குறைந்தபட்சம் மூன்று நான்கு மாதங்கள் உள்நோயாளியாகத் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்.

இதற்கான குறைந்தபட்ச செலவு மாதம் 12,000 முதல் 15,000 வரை. அவர்களில் பெரும்பாலானவர்கள் 10 பைசா வட்டிக்குத்தான் அந்தத் தொகையை வாங்கிக் கட்டுகிறார்கள் என்பதற்கான சாட்சிகளை தொழில்நிமித்தம் தொடர்ச்சியாக சந்தித்து வருகிறேன். இது மட்டுமின்றி இவர்களுக்கு மறைமுகமான பொருளாதார இழப்பையும் (வேலையின்மை , கடன் சுமை, உடல்ரீதியான பாதிப்பு ) கணக்கில் எடுத்துக்கொண்டால், அது எங்கோ சென்றுவிடும். தமிழகச் சூழலில் குடியின் அரசியல் பொருளாதாரம் குறித்த ஆய்வுகள் பெரிதாக இல்லை.

பொருளாதார இழப்பு ஒருபுறம் இருக்க, பெரும்பாலான தனியார் மையங்களில் அறிவியல்பூர்வமான, நோய்க்கு தகுந்த சரியான சிகிச்சை முறை வழங்கப்படுவதும் இல்லை. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே செல்லும் மனநல மருத்துவர்கள், பெயரளவுக்கே சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறார்கள். (மையங்கள் செயல்படுவதற்கு அவர்களின் திறனும் அறிவையும்விட பட்ட மேற்படிப்பின் நகலே முக்கியமானதாகக் கருதப்படுகிறது) .

குடிநோய்க்கான சிகிச்சை முறையை வெறும் குறுகிய ஒற்றை உயிரியல் (Biological Framework) சட்டகத்திற்குள் திணித்து, நோயர்களை மீட்டெடுக்க முடியாது என்பது நடைமுறை உண்மை. உள - சமூகவியல் - அரசியல் - பொருளாதாரக் காரணிகளை உள்ளடக்கிய சிகிச்சை முறையைக் கையாளாவிட்டால், குடிநோயர்கள் மீண்டும் மீண்டும் குடிக்கச்செல்வதைத் தடுக்க முடியாது. அவர்களின் குடிப்பழக்கத்தை தனி நபர் தோல்வியாகவும் அவர்களுடைய சிக்கல் மட்டுமே என்றும் அதற்கான தீர்வை அவர்களே தேட வேண்டும் எனும் அவலத்துக்கு அவர்களைத் தள்ளிவிடுகிறோம்.

(சென்னை உள்பட) அரசு மருத்துவமனைகளில் குடி நோய்க்கான சிகிச்சை இருக்கிறது என்பது தெரியாமல், நகர ஊரக எல்லையில் எங்கோ இருக்கும் ரீஹாப் மையங்களில் தங்கள் உறவுகளை மக்கள் சிகிச்சைக்கு அனுமதிப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

என்னென்ன செய்ய வேண்டும்?

தேர்தல் காலம் என்பதால் மக்களின் குறைகள், அரசியல் கட்சிகளின் பார்வையில்படுவது அவர்கள் கவனத்திற்குச் செல்வது, பேசுபொருள் ஆவது நிச்சயம்.

* டாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் 31,000 கோடிக்கு மேல் இருக்கும்நிலையில், எல்லா அரசு மருத்துவமனையிலும் குடிக்கான சிகிச்சை மையங்களை தொடங்க வேண்டும். மேற்கூறப்பட்ட உயிரியல் - உள - சமூக - பொருளாதார - அரசியல் காரணிகளை உள்ளடக்கிய சட்டகத்தின் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்.

* குடிநீக்க சிகிச்சைக்கான மருந்துகள்: மல்டி வைட்டமின், தையமின் ஊசி தொடங்கி குடிநீக்கலுக்கு மிக முக்கியமாகப் பயன்படுத்தப்படும் லோரசிபாம் ஊசியும் குடிக்கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும் எல்லா மருத்துவமனைகளில் தடையில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டும்.

* சிகிச்சைமுறையானது மருந்துகளை மையப்படுத்திய ஒன்றாக அல்லாமல், பல பரிமாணங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் (Multidimensional approach).

* மேலும், மிதமான குடிநோயர்களை சமூக அளவில் கண்டெடுத்து சமூக அளவிலான சிகிச்சையை ஊர் அளவிலேயே (Community level Detoxification and treatment startegy) அளிக்க வேண்டும். இதற்கு ஆரம்ப சுகாதார மருத்துவர்களின் சேவையை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

* குடிநோயருக்கு சிகிச்சை முடிந்து அவரை வீட்டுக்கு அனுப்பியவுடன், வாரம் ஒரு முறை அவரைப் பரிசோதித்து, தொடர் சிகிச்சை (Community level follow up treatment) அளிக்க சமூகநலச் சேவகர்களை நியமிக்க வேண்டும். மேலும், நோயர்களின் பொருளாதார நெருக்கடி - வேலையின்மை - குடும்பச் சிக்கல்களையும் துறை சார்ந்தவரோடு தொடர்புகொண்டு அந்த சமூக அளவிலான சேவகர் தீர்க்க முயல வேண்டும்.

* இந்த சிகிச்சைக்கு நோயர்கள் குடிப்பதற்காக செலவுசெய்த பணத்தில் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும். சிகிச்சையானது இலவசமாகவும் அந்தந்த அரசு மருத்துவமனையிலும் வழங்கப்பட வேண்டும். அதற்கான மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், சமூகநல அலுவலர்கள், சமூக அளவிலான சேவகர்கள், அனைவரையும் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்பட வேண்டும். மிகவும் முக்கியமானது: இந்தத் திட்டத்தை தனியார் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் செயல்படுத்தக் கூடாது.

*அரசு மருத்துவமனையில் குடிநோய்க்கான சிகிச்சை இருக்கிறது என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஊடகம், சமூக ஊடகத்தின் உதவியைப் பயன்படுத்த வேண்டும்.

* குடியினால் ஏற்படும் உடல் பாதிப்புகளுக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவில் இலவச மருத்துவ சிகிச்சையை அரசு மருத்துவமனையில் (காப்பீடு இருக்கு / காப்பீடு இல்லை என்ற பாகுபாடில்லாமல்) வழங்கப்பட வேண்டும்.

* குடிநோயர்கள் மருத்துவ சிகிச்சை முடிந்து பணிக்குச் செல்லும்வரை அவர்களின் குடும்பத் தேவைக்கும் பொருளாதார இழப்பைச் சமாளிக்கும்வகையில் உதவித் தொகை வழங்கப்பட வேண்டும். இதை (மேற்கூறிய) டாஸ்மாக் வருவாயிலிருந்து வழங்க முடியும்.

மேலும், குடியில்லா சமூகத்தை நோக்கிய பயணத்தை மக்கள் - நோயர் - மருத்துவர் - மருத்துவப் பணியாளர்கள் இணைந்து செயல்படும்வகையில் இந்தத் திட்டம் இருக்க வேண்டும்.

பி.கு: தாங்கள் வரி கட்டுவதாலேயே தேவையில்லாமல் மக்களுக்கு இலவச சிகிச்சை கொடுக்கிறார்கள் என்று மமதையோடு பேசுபவர்களுக்கு, அந்த ரூ.31,000 கோடியில் உங்களுக்கு அரசாங்கம் செய்தவை என்னென்ன என்பதை முதலில் பட்டியலிடுவோம்.

கட்டுரையாளர், அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் முதுநிலை மனநலமருத்துவர்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வியாழன் 1 ஏப் 2021