மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

ஓராண்டுக்கு பிறகு கிடைத்த வெற்றி!

ஓராண்டுக்கு பிறகு கிடைத்த வெற்றி!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை மறு அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ், தனியார் மருத்துவமனையில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது மூலம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்தாண்டு ஏப்ரல் 19ஆம் தேதி உயிரிழந்தார்.

மருத்துவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டம் மற்றும் வேலங்காடு பகுதிகளில் அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. அப்பகுதி மக்கள், கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதால் தொற்று பரவும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். அவரின் உடலை எடுத்துவந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து மருத்துவர் சைமனின் உடல், போலீஸ் பாதுகாப்புடன் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக டி.பி.சத்திரம், அண்ணாநகர் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட சைமனின் உடலைத் தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி ஆனந்தி, சென்னை மாநகராட்சியிடம் மனு கொடுத்தார். கொரோனா தொற்று பாதித்து மரணமடைந்த நபரின் உடல் பாதுகாப்பான முறைப்படி அடக்கம் செய்யப்பட்டபின் மீண்டும் வெளியில் எடுத்து வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று கூறி மனுவை சென்னை மாநகராட்சி ஆணையர், நிராகரித்துவிட்டார்.

இதையடுத்து, தனது கணவர் உடலை மீண்டும் தோண்டி, கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்கக் கோரி, அவரது மனைவி ஆனந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று(மார்ச் 31) நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நடந்தது. வேலங்காடு மயானத்தில் இருந்து மருத்துவர் சைமனின் உடலைத் தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி உடலை தோண்டி எடுத்து மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும். போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அடக்கம் செய்யும் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தனது முன்னோர்களின் உடல் அடக்கம் செய்த கல்லறை தோட்டத்தில் தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே சைமனின் ஆசை. அவரது மனைவியால் அந்த ஆசை ஓராண்டுக்கு பிறகு இன்று நிறைவேறியது.

வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

புதன் 31 மா 2021