மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

எங்கிருந்து பரவியது கொரோனா?

எங்கிருந்து பரவியது கொரோனா?

கொரோனா வைரஸ் உகான் நகரில் இருந்து பரவியதாகக் கருதப்படும் நிலையில் வெளவாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக உலக சுகாதார நிறுவனமும், சீனாவும் இணைந்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் உகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தாக்கம் இன்னும் முடியவில்லை. உகான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து கொரோனா பரவியதாகவும் கொரோனா வைரஸை சீனா தனது உகான் பரிசோதனை கூடத்தில் செயற்கையாக உருவாக்கியபோது அங்கிருந்து கசிந்திருக்கலாம் என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

எனவே, கொரோனா எப்படி தோன்றியது என்பதின் உண்மையை கண்டறிய உலக சுகாதார நிறுவனம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இக்குழுவினர் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சீனாவுக்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து விசாரணையில் இறங்கினர். உணவு சந்தை, ஆய்வுக்கூடம் போன்ற இடங்களுக்கும் நேரில் சென்றனர்.

இதுதொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் ஓர் அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள அதன் அறிக்கை, ஜெனீவாவில் உள்ள ஒரு நாட்டின் தூதரக அதிகாரி மூலம் ஒரு செய்தி நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. அதை செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டது.

உலக சுகாதார நிறுவனமும், சீனாவும் இணைந்து தயாரித்த அந்த அறிக்கையில்,”கொரோனா பரவியதற்கு நான்கு சூழ்நிலைகளைச் சொல்லலாம்.

முதலாவது, வெளவாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு பரவி இருக்கலாம். இதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இரண்டாவது, வெளவாலிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடியாகப் பரவி இருக்கலாம். இதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

மூன்றாவது, குளிரூட்டப்பட்ட உணவு பொருட்கள் வழியாக பரவி இருக்க சாத்தியம் உள்ளது. ஆனால், அப்படி நடந்திருக்காது.

நான்காவது, பரிசோதனை கூடத்தில் இருந்து கசியும் சூழ்நிலை. ஆனால், அதற்கு சிறிதுகூட சாத்தியம் இல்லை.

கொரோனாவை உண்டாக்கும் வைரஸ் போன்ற ஒரு வைரஸ், வெளவாலிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோன்ற வைரஸ்கள், எறும்புத்தின்னி, கீரி, பூனைகள் ஆகியவற்றிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று விவரிக்கப்பட்டுள்ளது.

“சீனாவின் உகான் நகர சந்தையில் இருந்துதான் கொரோனா பரவியதா என்பது குறித்து இந்த அறிக்கையில் எதுவும் உறுதிபட தெரிவிக்கப்படவில்லை. அறிக்கை சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்” என்றும் உலக சுகாதார நிறுவன நிபுணர் பீட்டர் பென் எம்பரேக் கூறியுள்ளார்.

-ராஜ்

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

புதன் 31 மா 2021