மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

சென்னையில் அதிகமாகும் காற்று மாசு!

சென்னையில் அதிகமாகும் காற்று மாசு!

கடந்த (2020) ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது சென்னையில் காற்று மாசுபாடு பெருமளவில் அதிகரித்துள்ளது என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 2.80 கோடிக்கும் மேலான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு நாளும் புதிதாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் கொரோனா ஊரடங்கின்போது பேருந்துகள், ரயில்கள் இயங்காததால் பலரும் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். அது இன்றுவரை தொடர்கிறது. இவை அனைத்தும் சாலைகளில் இயங்குவதால் கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. மற்ற இடங்களைவிட சென்னையில் அதிக வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதால், காற்று மாசுபாடு இங்கு கூடுதலாக ஏற்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் முதல் தொழிற்சாலைகள், வாகனப் போக்குவரத்து என அனைத்தும் நிறுத்தப்பட்டது. வாகனங்கள் இயங்காததால், அதிலிருந்து நச்சுகலந்த புகை வெளியேறுவதும் குறைந்தது.

மேலும், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளும் இயங்கவில்லை. இதனால் இங்கிருந்தும் நச்சுக்காற்று வெளியேறவில்லை. எனவே, ஊரடங்கு காலத்தில் சென்னையில் காற்று மாசுபாடு பெருமளவில் குறைந்திருந்தது.

பிறகு கொரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தொழிற்சாலைகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் அனைத்தும் தமிழகத்தில் செயல்பட தொடங்கியது. மேலும், அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் உள்ளிட்டவையும் இயங்குகிறது.

இதனால் ஊரடங்கு நேரத்தில் குறைந்திருந்த காற்று மாசுபாடு, தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. படிப்படியாக அதிகரித்து வந்த காற்று மாசுபாடு, தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது காற்று மாசுபாடு பெருமளவில் உயர்ந்திருப்பது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, நாடு முழுவதும் காற்று மாசுபாடு குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது. அந்தவகையில் சென்னையின் முக்கிய இடங்களில் காற்றின் தரம் கண்காணிக்கப்படுகிறது.

அவை ஆலந்தூர், மணலி கிராமம், மணலி, வேளச்சேரி ஆகும். தற்போது புதிதாக பெருங்குடி, ராயபுரம், கொடுங்கையூர், அரும்பாக்கம் ஆகிய இடங்களில் காற்றின் தரம் கண்காணிப்படுகிறது. இங்கு, காற்றின் தரம் குறித்து சோதனை நடத்தப்பட்டதில், தளர்வு வழங்கப்பட்ட பிறகு காற்று மாசுபாடு படிப்படியாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

கடந்த (2020) ஆண்டு மார்ச் 25ஆம் தேதி ஆலந்தூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட காற்றின் தரம் குறித்த ஆய்வில் 2.5 மைக்ரான் அளவு 15.7 ஆக இருந்தது. இது தற்போது அதிகரித்துள்ளது. இந்த (2021) ஆண்டு 25ஆம் தேதி நிலவரப்படி 2.5 மைக்ரான் அளவு 52.77 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல் ஒவ்வொரு இடங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 30 மா 2021