மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

சென்னை: கொரோனாவை சமாளிக்கும் பலம் உள்ளதா?

சென்னை: கொரோனாவை சமாளிக்கும் பலம் உள்ளதா?

வருங்காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், அதை சமாளிக்கக் கூடிய பலம் மாநகராட்சியிடம் இருக்கிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்யும் வகையிலும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ரிப்பன் மாளிகை மேல் ராட்சத பலூன் விடும் விழாவில் கலந்து கொண்டு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பலூனை பறக்கவிட்டார்.

இதையடுத்து பேசிய அவர், ”சென்னையில் தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகின்றன. நேற்று (மார்ச் 29) ஒரேநாளில் 6.85 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களும், ரொக்கமாக ரூ.5 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. இன்று (மார்ச் 30) காலை 1.30 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 577 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 30 வாக்குச்சாவடிகள் சிக்கலானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் 28,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5 ஆயிரம் பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். தபால் வாக்குகள் ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் முடிந்துவிடும்.

தேர்தல் முடிவடைந்தவுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். திருமணம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள், ஹோட்டல்கள் ஆகிய இடங்களில் இருந்து அதிகளவில் கொரோனா பரவி வருகிறது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும். கொரோனா நோய் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகரித்தாலும், அதை சமாளிக்கும் பலம் மாநகராட்சியிடம் உள்ளது” என தெரிவித்தார்.

கடும் நடவடிக்கை

தஞ்சை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பூத் சிலிப் விநியோக பணிகளை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார். இதையடுத்து பேசிய அவர், “தஞ்சை மாவட்டம் சென்னை நகரோடு வணிக ரீதியாக அதிக அளவு தொடர்பு உள்ளதாலும், மற்ற காரணங்களாலும் கொரோனா தொற்று அதிகரித்தது. தஞ்சை மாவட்டத்தில் 16 பள்ளிகளில் 217 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 197 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை புரிந்து கொண்டு அரசியல் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் மக்கள் முகக்கவசம் அணிந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து இதுவரை ரூ. 26 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களில் விதி மீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நிறுவனம் மூடப்படும்” என தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலின் வாராந்திர தேசிய சராசரி 5.65% ஆக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்ரா- 23%, பஞ்சாப்- 8.82%, சத்தீஸ்கர்- 8%, மத்திய பிரதேசம்- 7.82%, தமிழகம் - 2.5% , கர்நாடகா-2.45%, குஜராத்-2.2%, டெல்லி-2.04%, என்ற அளவில் கொரோனா பரவல் உள்ளது என தெரிவித்துள்ளார்.

வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

செவ்வாய் 30 மா 2021