மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

பதட்டமான பூத் பட்டியலை வெளியிட மறுப்பு!

பதட்டமான பூத் பட்டியலை வெளியிட மறுப்பு!

தேர்தலில் புதிய மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், பாதுகாப்பு கருதி பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலை வெளியிட முடியாது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திமுக கட்சி சார்பாக, அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ”15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்கும் மின்னணு வாக்கு இயந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். பதற்றமான தொகுதிகளை கண்டறிவது குறித்து அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த வேண்டும். வாக்குபெட்டிகள் வைக்கப்படும் மையங்களில் ஜாமர் கருவிகள் பொருத்த வேண்டும். வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை அரசியல் கட்சி நிர்வாகிகளை கண்காணிக்க அனுமதிக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவை இணையத்தில் நேரலை செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று(மார்ச் 30) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு வந்தது. அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், அனைத்து வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவையும் நேரலை செய்ய வேண்டும். வாக்குப்பதிவு இயந்திர பதிவுகளை மாற்ற முடியும் என்ற பயம் வாக்காளர்களிடம் இருப்பதாகவும், 2019 மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் மாவட்ட ஆட்சியர் அனுமதி இல்லாமலேயே பாதுகாப்பு அறையில் தாசில்தார் ஒருவர் சென்றதால் நடவடிக்கைக்கு உள்ளானதையும் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் , வாக்குப்பெட்டி வைக்கும் மையங்களில் ஜாமர் கருவிகளை பொருத்த வேண்டியதன் அவசியத்தை கூறினார்.

இதையடுத்து, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நிரஞ்சன் ராஜகோபாலன் , ”மார்ச் 26ஆம் தேதி, அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, 11 ஆயிரம் வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் தேர்தலில் பயன்படுத்தப்படும்.

தேர்தலுக்கு முன்பே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மின்னணு வாக்கு இயந்திரங்களை வை-பை மூலமாக தொடர்பு கொண்டு வாக்குப்பதிவில் திருத்தம் செய்ய முடியாது என்பதால் வாக்குப்பெட்டி மையங்களில் ஜாமர் கருவி பொருத்த அவசியமில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவை இணையத்தில் நேரலை செய்யப்படும். ஆனால், பாதுகாப்பு காரணங்களால் தேர்தல் அதிகாரிகள் மட்டுமே பார்க்க முடியும்” என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேர்தல் நாளன்று கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

மனுதாரரின் கோரிக்கைகளுக்கு உறுதி அளிக்கப்பட்டதையடுத்து, சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 30 மா 2021