மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

தேர்தல் விதிமீறல்: ஆசிரியை சஸ்பெண்ட்!

தேர்தல் விதிமீறல்: ஆசிரியை சஸ்பெண்ட்!

தபால் வாக்கு அளித்த விவரத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் சரகம் சுரண்டையில் ஆர்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் என்பவர் தன்னுடைய தபால் வாக்கைப் பதிவு செய்த பின்பு, அதை தனது வாட்ஸ்அப் , முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார், அதன் நகல்களை இணைத்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனுவொன்றை அனுப்பினார். அதில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

வாக்கு பதிவு விவரத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

தேர்தல் நடத்தை விதிகளின் பிரிவு 49 (M)இன் படி விதி 38இன் கீழ் அல்லது இந்த விதிகளின் வேறு ஏதேனும் விதிகளின் கீழ் வாக்குச் சீட்டு வழங்கப்பட்ட ஒவ்வொரு வாக்காளரும் வாக்குச் சாவடிக்குள் வாக்களிக்கும் ரகசியத்தைப் பராமரிக்க வேண்டும் என்ற விதியை மீறியதற்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தலைமை அலுவலர் தவிர வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குட்பட்ட பகுதியில் செல்போன், வயர்லெஸ் செட், கார்டுலெஸ் போன் போன்றவற்றை யாரும் பயன்படுத்தக் கூடாது.

தேர்தல் அலுவலர்கள் வாக்குச்சாவடியை விட்டு வெளியே போகக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பார்வையின்மை அல்லது பிற வகை உடல் நலிவு காரணமாக வாக்காளர் வாக்களிக்க ஏதுவாக, அவரின் சார்பில் வாக்களிக்க 18 வயது குறையாத ஒருவருக்கு அனுமதி அளிக்கலாம்.

ஒரே உதவியாளர் பல வாக்காளர்களுக்கு வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது.

வாக்காளர்களுக்கு உதவியாளராக வருபவரிடம், பதிவு செய்த வாக்கின் ரகசியத்தைக் காப்பார் எனவும், வேறு எந்த வாக்காளருக்கும் உதவியாளராக ஏற்கெனவே செயல்படவில்லை எனவும் உறுதிமொழி பெற வேண்டும். உதவியாளராக வரும் நபருக்கு அவரது வலது கையில் ஆட்காட்டி விரலில் மை வைத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

செவ்வாய் 30 மா 2021