மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

தடுப்பூசிக்குப் பிறகும் கொரோனா வருமா..?

தடுப்பூசிக்குப் பிறகும் கொரோனா வருமா..?

கோவிட்-19 தொற்றுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்க மாட்டார்களா என இருந்த நிலை மாறி, இதைப் போட்டுக்கொள்ளலாமா, அதைப் போட்டுக்கொள்ளலாமா என்று சாய்ஸ் கேட்கும் அளவுக்குத் தடுப்பூசிகள் வந்துவிட்டன.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதமே கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. இதுநாள் வரை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 - 59 வயதுக்குட்பட்டவர்களுள் நீரிழிவு, இதயநோய் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளைத் தமிழக சுகாகாரத்துறை செய்து வருகிறது.

இருப்பினும் தடுப்பூசி பற்றி புதுப்புது சந்தேகங்கள் நாள்தோறும் எழுகின்றன. இதற்கான தீர்வு என்ன? மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், சுகாதார அமைப்புகள் அளித்த பதில்களின் தொகுப்பு உங்களுக்காக...

தடுப்பூசி போட்டுக்கொள்ள எந்த நாட்கள் சிறந்தவை?

எந்த நாளில் வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். சிலருக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு சோர்வு, காய்ச்சல் போன்ற லேசான பக்கவிளைவுகள் ஏற்படும்.

அதனால் அலுவலகத்துக்கு விடுப்பு எடுக்க நேரிடும். வார இறுதி நாள்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் விடுமுறை நாள்களில் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். அதனால் வார இறுதி நாட்களில் போட்டுக்கொள்வது நல்லது. விடுப்பு எடுப்பதில் சிரமம் இல்லாதவர்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.

தடுப்பூசி போடுவதற்கு வெறும் வயிற்றில் போகலாமா?

நன்றாகச் சாப்பிட்டுவிட்டுதான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் போடக்கூடாது. தடுப்பூசி போடும் இடத்துக்குச் சென்ற உடன் பதற்றத்தில் சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். அதுபோன்றவர்கள் ரத்த அழுத்தம் மட்டுப்பட்ட பிறகு, தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தைராய்டு, நீரிழிவு போன்ற பிரச்சினைகளுக்கு காலை உணவுக்கு முன், பின் மாத்திரைகள் எடுப்பவர்கள் தடுப்பூசி போடப்போகும்போது என்ன செய்ய வேண்டும்?

வழக்கமாக எடுக்கும் மாத்திரைகளை எக்காரணம் கொண்டும் தவறவிடக் கூடாது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் அந்த மாத்திரைகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்சுலின் போட்டுக்கொள்பவர்களும் வழக்கமான நேரத்துக்கு இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொண்ட பிறகு, தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இன்சுலின் எடுப்பவர்களும் வெறும் வயிற்றில் தடுப்பூசி போடக் கூடாது.

தடுப்பூசி போட்டுக்கொண்டால் கட்டாயம் இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க வேண்டுமா?

பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாதவர்களுக்கு ஓய்வுகூடத் தேவையில்லை. அவர்களின் வழக்கமான பணிகளைத் தொடரலாம். காய்ச்சல், சோர்வு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே ஓய்வு தேவைப்படும்.

தடுப்பூசிக்குப் பிறகு ஆன்டிபயாடிக், வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாமா?

சில வலி நிவாரண மாத்திரைகள் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதை மட்டுப்படுத்தும் என்பதால் தடுப்பூசி போட்ட இரண்டு நாள்களுக்கு வலி நிவாரண மாத்திரைகள் எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆன்டிபயாடிக் மாத்திரைகளால் இதுபோன்ற பிரச்சினை ஏற்படாது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

இரண்டாம் தவணைக்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பது நல்லதா?

வெளிநாடுகளில் செய்த ஆய்வில் நான்கு வாரங்களுக்கு மேல் 8 முதல் 12 வார இடைவெளியில் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடி உருவாவது சற்று அதிகமாக இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.

இந்தியாவிலும் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது தவணைக் காலத்தை 6 முதல் 8 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளது. கோவாக்ஸின் தடுப்பூசிக்கு இந்தக் கால அவகாச நீட்டிப்பு பொருந்தாது. 28 நாள்கள் இடைவெளியில் கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டாவது தவணையைப் போட்டுக்கொள்ளலாம்.

இரண்டாம் தவணை தடுப்பூசிக்குப் பிறகுதான் தீவிர பக்க விளைவுகள் ஏற்படுமா?

பெரும்பாலும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளுக்கு ஒரே மாதிரி பக்கவிளைவுகள்தான் ஏற்படும். தாமதமான நோய் எதிர்ப்பு வினை (Delayed Immune Reactions) ஏற்படுவதால் சிலருக்கு முதல் தவணையின்போது பக்கவிளைவுகள் ஏற்படாமல், இரண்டாம் தவணையின்போது ஏற்படலாம்.

பக்கவிளைவுகள் நபருக்கு நபர் வேறுபடுவது ஏன்?

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி என்பதால் கோவிட் அறிகுறிகள் போன்ற மிதமான பக்கவிளைவுகள் ஏற்படும். அதனால்தான் தலைவலி, காய்ச்சல், உடல்வலி, மூட்டுவலி, தாகம் ஏற்படுவது, சுவை தெரியாமல் போவது, வாய்க்கசப்பு போன்றவை ஏற்படுகின்றன. எல்லாருக்கும் எல்லா பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. ஒவ்வொருவரின் உடலின் நோய் எதிர்ப்பு திறனைப் பொறுத்து பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.

பக்கவிளைவுகள் எத்தனை நாட்கள் நீடிக்கும்?

பொதுவாக, இரண்டு முதல் மூன்று நாள்களில் பக்கவிளைவுகள் சரியாகிவிடும்.

ஒவ்வாமை இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

ஏற்கெனவே அனபிலாக்ஸிஸ் (Anaphylaxis) எனப்படும் தீவிர ஒவ்வாமை பிரச்னை ஏற்பட்டவர்களுக்கு மட்டும் தற்போது கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம். சற்று தாமதித்து போட்டுக்கொள்ளலாம் என்று ஆய்வுகளின் பேரில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற ஒவ்வாமை பிரச்னைகள் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அதிக ரிஸ்க் இல்லை என்றுதான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வாமை பிரச்னை இருப்பவர்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா ஊசி போட்டுக்கொள்ளலாமா?

அது உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் கருத்தரிப்பு காலத்தில் பெண்களுக்கு கொரோனா பாதிப்பு (இணை நோயும் இருப்பின்) ஏற்படுவது சற்று ஆபத்தானதுதான். ஆகவே சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்த ஆலோசித்துக் கொள்ளலாம்.

அவ்வாறே குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திய பிறகு குழந்தைகளுக்குப் பாலூட்டுவதில் சிக்கல் ஏற்படும் என்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் தாய்மார்கள் இது தொடர்பான மருத்துவர்களை அணுகி ஆலோசித்த பிறகு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொள்ளலாம்.

மாதவிடாய் நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

தாராளமாகப் போட்டுக்கொள்ளலாம். ஏதேனும் ஒவ்வாமை பிரச்னை இருந்தால் மட்டும் தடுப்பூசி போடுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வாமை இல்லாதவர்கள் மாதவிடாயின் எந்த நாளில் வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசியால் மரபணு பாதிப்பு ஏற்படுமா?

நிச்சயமாக இல்லை. கொரோனா தடுப்பு மருந்து நமது உடலின் மரபணுவில் எந்த மாற்றத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவை நம் உடலில் சென்ற பிறகு கொரோனா வைரசுக்கு எதிராக இயற்கையாக உள்ள நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் பணியையே பிரதானமாகச் செய்கின்றன.

ஏற்கெனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர் கொரோனா ஊசி போடலாமா?

நிச்சயமாக நீங்கள் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நீங்கள் மீண்டும் கொரோனாவினால் பாதிக்கப்படாமல் எவ்வளவு காலம் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்பதை மருத்துவ நிபுணர்கள் இதுவரை கணிக்கவில்லை. எனவே நீங்கள் தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொள்வது நல்லது.

தடுப்பூசிக்குப் பிறகும் கொரோனா வருமா..?

தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொண்டால் நீங்கள் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படுவது நிச்சயம் தடுக்கப்படும். ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலமும் வித்தியாசமானது. தடுப்பு மருந்தானது கொரோனா வைரஸிலிருந்து உங்களுக்கு 100 சதவிகிதம் பாதுகாப்பை அளிக்கும் என்று கூற முடியாது. ஆனால், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து சக்திகளையும் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வழங்கும் என்பது உறுதி.

அடுத்தது கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொண்டவர்களில் 5 சதவிகிதம் பேருக்குத் தொற்று வரலாம். அதற்கான காரணம் அந்தக் குறிப்பிட்ட நபர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் உருவாகாமல் இருக்கலாம். அல்லது அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். கொரோனா வைரஸ் தன்னை வெளிப்படுத்த எடுத்துக்கொண்ட காலகட்டத்தில் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படும்.

அத்துடன் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட பிறகும் சில நாட்களுக்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது, சமூக இடைவெளி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனென்றால் கொரோனா தடுப்பு மருந்து நமது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்கு சில காலம் எடுத்துக்கொள்ளும். நாமும் அதற்கு அனுமதிக்க வேண்டும்.

-ராஜ்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

செவ்வாய் 30 மா 2021