மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 மா 2021

வருங்காலத்தில் கோர்ட் அறைகள் சிறியதாகலாம்!

வருங்காலத்தில் கோர்ட் அறைகள் சிறியதாகலாம்!

கொரோனா தொற்று காரணமாக நீதியை அணுகுவதில் ஏராளமான பிரச்சினைகள் இருந்தாலும், நீதிமன்ற அறைகளை நவீனப்படுத்துவதற்கு இது உதவியிருக்கிறது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலம் போர்வோரிம் பகுதியில் மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா அமர்வுக்கான புதிய கட்டடத் திறப்பு நிகழ்ச்சி நேற்று(மார்ச் 27) நடைபெற்றது. அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, மூத்த நீதிபதி என்.வி.ரமணா, மத்திய சட்டம், நீதித்துறை மற்றும் மின்னணுத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பேசுகையில், “தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எதிர்காலத்தில் சிறிய நீதிமன்ற அறைகள் அமைவதற்கான போக்கை நான் காண்கிறேன். ஆன்லைன் மூலமாக மனுக்கள் தரவுகள் சேமித்தல் போன்றவை, மிகப்பெரிய சேமிப்பு அறைகள் மற்றும் பேப்பர்களை சேமிப்பதற்காக அதிக அறைகள் போன்ற தேவையை நீக்கும்.

புதிதாக நீதிமன்ற அறைகளை உருவாக்குவது அவசியமானதாக இருந்தாலும், தற்போதுள்ள நீதிமன்ற அறைகளை நவீனமயமாக்குவதற்கு மிகக் குறைந்த முக்கியத்துவமே கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் நீதிமன்ற பணிகளில் பல சிக்கல்களை ஏற்படுத்தியிருந்தாலும், அது நீதிமன்ற அறையை நவீனமயமாக்க வழி வகுத்துள்ளது. மும்பையில், மும்பை உயர் நீதிமன்றத்திற்கு ஒரு புதிய கட்டிடம் தேவையாக உள்ளது. ஏனெனில், மும்பை கட்டிடம் ஏழு நீதிபதிகளுக்காக கட்டப்பட்டது. தற்போது இங்குள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 40க்கு மேல் உள்ளது.இது சாத்தியமற்றது என்று கூறினார்.

மேலும், கோவா நீதிமன்றத்தில் அடிக்கடி அமர்ந்திருக்கும் ஒரே நீதிபதி அல்லது ஒரு சில நீதிபதிகளில் நானும் ஒருவனாக பல நேரங்களில் இருந்திருக்கிறேன். நீதிபதி போப்டே கோவாவைச் சேர்ந்தவர் என்று நான் விளிக்கப்படும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால் கோவா, அதன் கலாச்சாரம், இயற்கை வாழ்விடம், அதன் இசை மற்றும் அங்குள்ள கால்பந்து விளையாட்டு போன்றவற்றை ரசித்து மகிழ்ந்திருக்கிறேன்” என்றார்.

”நீதிமன்ற கட்டமைப்பு என்பது, நீதித் துறையில் மிகவும் முக்கியமான ஒன்று. வழக்குகள் தேங்குவதை தடுக்க உள்பட பலவற்றிற்கு அனைத்து வசதிகளும் இருக்க வேண்டியது அவசியம். நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டமைப்புகளை, நவீனப்படுத்த தேசிய நீதித்துறை கட்டமைப்பு வாரியத்தை உருவாக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் இணைந்து, இதை உருவாக்க வேண்டும். நவீன யுகத்துக்கு ஏற்ப, நீதிமன்றத்திலும் வசதிகள் செய்யப்பட வேண்டும்” என உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா இந்த நிகழ்ச்சியில் பேசினார்.

வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

ஞாயிறு 28 மா 2021