மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவு!

அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவு!

அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே ரவி என்பவர் நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்தின் மதிப்பு ஒரு ஏக்கருக்கு 12 லட்ச ரூபாய் என முத்திரைத் தீர்வை துணை ஆட்சியர் நிர்ணயித்தார். அதை மறுமதிப்பீடு ஆய்வு செய்த பதிவுத்துறை தலைவர், ஒரு ஏக்கரின் விலை ரூ.51 லட்சம் என மறுநிர்ணயம் செய்தார். நிலத்தின் மதிப்பை உயர்த்தி நிர்ணயித்த பதிவுத்துறை தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நிலம் வாங்கியவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று(மார்ச் 27) நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரணை செய்தார். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலம் ரூ.25 லட்சம் முதல் 30 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதை ஆய்வு செய்யாமல் விலை நிர்ணயம் செய்தது துணை ஆட்சியரின் தவறு. பதிவுத்துறை தலைவர் தாமாக முன்வந்து ஆய்வு செய்து ரூ.51 லட்சம் நிர்ணயம் செய்ததில் தவறில்லை என தெரிவித்தார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ரவியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், நிலமதிப்பை குறைவாக நிர்ணயித்து, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காதது அதிருப்தி அளிக்கிறது என்றார் நீதிபதி.

அரசின் கொள்கைகள் மற்றும் நலதிட்டங்களை செயல்படுத்தும் அதிகாரிகளே ஊழல் செய்வதால், அந்த திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

அரசு ஊழியர்களின் சொத்துக்களை கண்காணிக்கவும், சரிபார்க்கவும் உரிய நடைமுறை இல்லை என்று கூறிய நீதிபதி, அரசு ஊழியர்களின் சொத்து, திறமை, நேர்மையை ஆய்வு செய்ய அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும். பத்திரப் பதிவு அலுவலகங்களிலும் ஊழல் தடுப்பு பிரிவு ஏற்படுத்த வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும், அலுவலகத்தின் பணி, ஒவ்வொரு சேவைக்கும் எத்தனை நாள்கள் ஆகும் என்பது பற்றிய அறிவிப்புப் பலகை வைத்திருக்க வேண்டும். மேலும், லஞ்சம் தொடர்பான புகார் அளிக்க தொலைபேசி எண், முகவரி இடம் பெற வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

சனி 27 மா 2021