dதியாகராஜர் கோயிலில் ஆழித் தேரோட்டம்!

public

ஆசியாவிலேயே சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் நேற்று (மார்ச் 25) கோலாகலமாக நடந்தது.

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் நேற்று காலையில் தியாகராஜருக்கும் தேருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வேத மந்திரங்கள் ஒலிக்கத் தொடங்கியது. 450 டன் எடையுள்ள 96 அடி உயர தேரினை இழுக்க 15 டன் எடை கொண்ட வடக்கயிறு கட்டப்பட்டது. ஒவ்வொரு வடக்கயிற்றின் நீளம் சுமார் ஒரு கி.மீ தூரம் கொண்டதை பக்தர்கள் ‘ஆருரா… தியாகேசா…’ என உற்சாக குரல் எழுப்பி வடம்பிடித்து தேரினை இழுத்தனர்.

தேரோட்டத்தினை முன்னிட்டு கோயிலின் தேவாசிரிய மண்டபத்தில் இருந்து தியாகராஜர் அஜபா நடனத்துடன் நகர்வலமாக வந்து திருத்தேர் ஏறினார். அதுமுதல் தேரிலிருந்தே பக்தர்களுக்கு தியாகராஜர் காட்சி அளித்தார். முன்னதாக 5 மணிக்கு விநாயகர், முருகன் தேர்கள் பக்தர்களால் இழுத்து செல்லப்பட்டது. தியாகராஜர் ஆழித் தேரைத் தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களும் இழுக்கப்பட்டது. ஐந்து தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்ற காட்சி பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக இருந்தது.

அழகிய வண்ணத் துணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பார்ப்பவர்களின் மனங்களைக் கவரும் வகையில் இருந்தது. 96 அடி உயரத்தில் கம்பீரமாய் அசைந்தாடி வந்த தேரினைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஆதீன கர்த்தர்கள் தருமபுரம் ஆதீனம், திருப்புகழூர் வேளாக்குறிச்சி ஆதீனம், திருவாடுதுறை மற்றும் திருப்பனந்தாள் ஆதீனங்கள் பங்கேற்றனர்.

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் வழக்கமாக மூன்று நாட்கள் நடைபெறும். இதற்கு முதல் நாள் விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டமும், ஆழித்தேரைத் தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக இந்த ஐந்து தேரோட்டமும் இரண்டு நாட்களாக மட்டுமே நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு ஒரே நாளில் ஐந்து தேரோட்டமும் நடைபெற்றது. கால விரயத்தைத் தவிர்க்கும் வகையிலும் பொருளாதாரச் சிக்கனத்தை முன்னிட்டும் ஒரே நாளில் ஐந்து தேர்களும் இழுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

திருவாரூர் ஆழித் தேரோட்டம் கி.பி 6ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே நடைபெற்று வருகிறது என்பதை திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகம் மூலம் அறிய முடிகிறது. 1748ஆம் ஆண்டு நடைபெற்ற ஆழித் தேரோட்டம் குறித்து தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 1765இல் தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, ஆழித் தேரோட்டத்தில் பங்கேற்றது தொடர்பான குறிப்புகளும் உள்ளதாக சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.

தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகாலில் உள்ள மராட்டிய மன்னர் காலத்து ஆவணம் ஒன்றில், திருவாரூர் தியாகராஜ சுவாமி பங்குனி ரதோஸ்தவம், மாசி மாதம் 8ஆம் தேதி முதல் சித்திரை 2ஆம் தேதி வரையிலும் 55 நாள் உத்சவ விவரங்கள் என 1843இல் நடைபெற்ற பங்குனி உத்ஸவ விழா பற்றி தெரிவிக்கிறது.

ஹஸ்த நட்சத்திரத்தில் துவஹாரோஹணம் எனும் கொடியேற்றி, பூசத்தில் தேருக்குச் சென்று, ஆயில்ய நாளில் தேரோட்டம் நிகழ்த்தி, உத்திரத்தில் தீர்த்தம் அருளி, உத்திராடத்தில் விழா பூர்த்தி என்பது திருவாரூர் பங்குனித் திருவிழா குறித்த சொல்மொழி ஆகும்.

இது 36 நாட்கள் திருவிழாவாகும். இதுதவிர, விழா தொடக்கத்துக்கு முன்பு பூர்வாங்கம் ஒரு நாள், ஐயனார் திருவிழா ஐந்து நாட்கள், மீண்டும் பூர்வாங்கம் ஒருநாள், பிடாரி திருவிழா 10 நாட்கள், பூர்வாங்கம் இரண்டு நாட்கள் எனக் கொண்டாடப்பட்டு அதன்பிறகு பங்குனிப் பெருவிழா 36 நாட்கள் என மொத்தம் 55 நாட்கள் விழா நடைபெற்றுள்ளது.

அதன்பிறகு கால மாற்றத்தில் பங்குனி ஆயில்ய நட்சத்திரம் அல்லாமல் பல்வேறு காலகட்டங்களில் தேரோட்டம் நடைபெற்று வந்தது. இது, பக்தர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. எனவே, ஆகம விதிகளை மாற்றக் கூடாது, ஆயில்ய நட்சத்திரத்திலேயே தேரோட்டம் நடத்த வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இந்த ஆண்டு திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஆயில்ய நட்சத்திரமான மார்ச் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

“ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடிய சிறப்பு மிக்க திருவாரூர் ஆழித் தேரை பக்தர்கள் மகிழ்ச்சி சூழ நேற்று பங்குனி ஆயில்யத்தில் ஆழித்தேர் இழுத்து தியாகராஜர் தரிசனம் பெற்றுச் சென்றனர்.

**-சக்தி பரமசிவன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *