மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

மும்பை தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!

மும்பை தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!

மும்பை தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையில் பாந்தப் எனும் பகுதியில் ட்ரீம்ஸ் என்ற வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இதில் மூன்றாவது தளத்தில் செயல்பட்டு வரும் சன்ரைஸ் என்ற தனியார் மருத்துவமனையில் நேற்று(மார்ச் 25) நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனைக்குள் சிக்கியிருந்த 70க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை கிரேன் உதவியுடன் தீயணைப்பு படையினர் வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து, நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்ததாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதில், இரண்டு பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கூறுகையில், ”வணிக வளாகத்திற்குள் மருத்துவமனை செயல்படுவதை பார்ப்பது இதுதான் முதல்முறை. இந்த மருத்துவமனையிலிருந்து மீட்கப்பட்ட 7 நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும், 70 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது” என கூறினார்.

”கொரோனாவல்தான் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும், தீ விபத்தினால் நோயாளிகள் இறக்கவில்லை என்றும் சன்ரைஸ் மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும்,ட்ரீம்ஸ் மாலின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், மூன்றாம் தளத்தில் உள்ள சன்ரைஸ் மருத்துவமனை வரை புகை வந்தது. இதைத் தொடர்ந்து, அனைத்து அலாரங்களும் பீப் சத்தம் கொடுத்ததால், உடனடியாக நோயாளிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டோம். மீட்கப்பட்ட நோயாளிகள் ஜம்போ கோவிட் மையத்திற்கும், சில நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் பல கோவிட் நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றுள்ளனர். மேலும், தீ விபத்துக்கான உரிமம், நர்சிங் ஹோம் உரிமத்துடன் தான் மருத்துவமனை செயல்பட்டு கொண்டிருக்கிறது” என தெரிவிக்கப்பட்டது.

”தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது ஒரு கொடுமையான மற்றும் தீவிரமான சம்பவம். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவமனை மீது வழக்கு பதிவு செய்வோம்” என மும்பை போலீஸ் கமிஷனர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தில் மும்பையில் பண்டாரா மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த இரண்டு மாதத்திற்குள் மீண்டும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையிலேயே இந்த ஆண்டில் இரண்டு முறை மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இப்படி தொடர்ந்து மருத்துவமனையில் தீ ஏற்படுவது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வினிதா

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வெள்ளி 26 மா 2021