மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

இந்தியாவின் முதல் பெண் பால்வினை நோய் மருத்துவர்!

இந்தியாவின் முதல் பெண் பால்வினை நோய் மருத்துவர்!

முதல் பெண் - நிவேதிதா லூயிஸ்

முதல் பெண் பால்வினை நோய் மருத்துவர் (வெனிரியாலஜிஸ்ட்) மற்றும் மதராஸ் பொது மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவ சூப்பிரண்டன்ட்- மருத்துவர் சி.என்.சௌமினி

“பாலியல் நோயை உடல் சார்ந்த நோயாக மட்டுமே அணுகக்கூடாது என்றே நான் நினைக்கிறேன். மனித நல மற்றும் சமூக நலப் பணிகள் அத்தனைக்கும் இந்த பாலியல் நோய்கள் இடையூறாக இருக்கின்றன. ஆகவே பால்வினை நோய்களைக் கட்டுப்படுத்த முனையும் போது சமூகத்தில் ஏற்படும் பண்பாடு மற்றும் சமுதாய மாற்றங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதை மாற்றியமைக்கும் ‘மேஜிக் ஃபார்முலா’ என்றெல்லாம் எதுவும் இல்லை. பால்வினை நோய்களைக் கட்டுப்படுத்த ஏற்கனவே பயன்பாட்டிலிருக்கும் ஆனால் சரிவர பயன்படுத்தாத முறைகளையே இன்னும் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்”, மருத்துவர் சி.என்.சௌமினி, 19 மே, 1975, உலக சுகாதார நிறுவனத்தின் 28வது உலக சுகாதாரக் கூட்டம், ஜெனீவா.

ஜனவரி 5, 1922 அன்று செடவச்சி நெல்லியத் சௌமினி பிறந்தார். 1940ம் ஆண்டு மதராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார். மகப்பேறியல் மற்றும் மகளிர் நலனில் பட்டயப் படிப்பை முடித்தவர், விஜயவாடா மருத்துவமனையில் துணை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியில் சேர்ந்தார். விசாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியில் பால்வினை நோய் மருத்துவத்தில் (வெனிரியாலஜி) முதுநிலை பட்டயப் படிப்பை முடித்தார்.

இந்தத் துறையில் பட்டயப் படிப்பை முடித்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். இதன் காரணமாக உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் இந்தத் துறையில் மேல்படிப்பைத் தொடர ‘ஃபெல்லோஷிப்’ உதவி அவருக்குக் கிடைத்தது. அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியிலுள்ள ஜான் ஹாப்கின்ஸ் கல்லூரியில் சௌமினி பால்வினை நோய் மருத்துவ சிறப்புப் படிப்புடன், பொது சுகாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

முனைவர் பட்டப்படிப்பை முடித்த சௌமினி, துணை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பயிற்றுனராக சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். மதராஸ் மருத்துவக் கல்லூரியின் பால்வினை நோய் மருத்துவப் பிரிவின் தலைவரும், உலகப்புகழ்பெற்ற பால்வினை நோய் மருத்துவருமான மருத்துவர் ஆர்.வி.ராஜம் அவர்களின் வழிகாட்டுதலில் அவரது மருத்துவ பணிகள் தொடங்கின எனலாம். அதன்பின் மருத்துவர் பி.என்.ரங்கையாவிடமும் பயிற்சி பெற்றார். அவருடன் பணியாற்றுகையில் மதராஸ் பல்கலைக்கழகத்தில் ‘பால்வினை நோய்களில் தொற்று’ (‘Epidemiological aspects of Venereal Diseases) என்ற ஆய்வை வெற்றிகரமாக முடித்து அடுத்த முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

மதராஸ் மருத்துவக் கல்லூரியின் பால்வினை நோய் மருத்துவ மையத்தின் இயக்குனராக 1970ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1978ம் ஆண்டு ஜனவரி வரை பணியாற்றினார். அதே சமயம் மதராஸ் பொது மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவ சூப்பிரன்டன்டாகவும் 1970 முதல் 1973 வரை மூவாண்டு பணியாற்றினார். தன் பணிக்காலத்தில் பால்வினை நோய் மருத்துவ மையத்தின் தரத்தை உயர்த்திய அரிய பணியை சௌமினி வெற்றிகரமாகச் செய்தார்.

சௌமினியைக் குறித்து தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் மூத்த சரும நோய் மருத்துவர் பிரேமலதா சுப்ரமணியன் தனக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்தார். “என்னளவில் அவர் அருமையானவர்; தலைமைப் பணிக்குத் தகுதியானவர். திறமைமிக்கவர்; ஆனால் அந்த கர்வம் கொஞ்சமும் இல்லாதவர். பணிவு கொண்டவர் என்றாலும் நினைத்ததை நடத்தி முடிக்கும் துணிவு அவரிடம் உண்டு. அவர் பிறந்த ஊரோ அல்லது அவரது பூர்வீகமோ பற்றிய தகவல்கள் என்னிடம் இல்லை. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்; ஆன்மிகத்தில் பெரும் நாட்டம் கொண்டவர். மகளிர் மருத்துவர்கள் சங்கத்தைத் தொடங்கி நடத்திய முன்னோடி டாக்டர் சௌமினி”, என்று சொல்கிறார்.

“அவருடன் மருத்துவத் துறை சார்ந்த கூட்டங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பவானி, சேலம், கோட்டயம் போன்ற ஊர்களுக்கு அவருடன் பால்வினை தொற்று நோய் கூட்டங்கள்- ‘எஸ்.டி.டி. கான்ஃபரன்சுகள்’ சென்றிருக்கிறேன். கூட்டங்களில் கலந்து கொண்ட பிறகு அந்தந்த ஊரின் முக்கியக் கோயில்களுக்கு என்னை அழைத்துச் செல்வார். கல்வி, பயணம் என இரட்டை மகிழ்வை எனக்குத் தந்தார். நான் இளம் மருத்துவராக இருந்தபோது எழுதிய ஆய்வுக்கட்டுரைகளை இது போன்ற கூட்டங்களில் பேச வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தவர் டாக்டர் சௌமினி.”

“ஒரு முறை திடீரென என்னை அழைத்தவர், என்ன ஆய்வுக் கட்டுரை இப்போது கையில் வைத்திருக்கிறாய் என்று கேட்டார். கையிருப்பை சொன்னதும், சரி வா, நாளை நாம் கோட்டயத்துக்கு ஒரு கூட்டத்துக்குப் போகவேண்டும் என்று சொன்னார். உரிய அனுமதி பெற்று அடுத்த நாளே அவருடன் என்னை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். ஒரே நாளில் அரசு அனுமதி பெற்று என்னை அழைத்துச் சென்றதை எப்படி சாத்தியமாயிற்று என்று வியக்கிறேன். நினைத்ததை முடிப்பதில் அத்தனை மன உறுதி அவருக்கு”, என்று பிரேமலதா சொல்கிறார்.

“பால்வினை நோய்கள் மருத்துவத் துறையில் பெண்களே இல்லாத காலத்தில் அதில் நுழைந்த முதல் பெண் மருத்துவர் சௌமினி தான். பால்வினை நோய்களை ஒழிப்பதில் தமிழகத்தில் பெரும் முன்னோடியாக செயல்பட்டவர் அவர்”, என்றும் அவர் சொல்கிறார். சிஃபைலிஸ் போன்ற ஆண்களின் கொடிய பால்வினை நோய்களை அரசு மருத்துவமனைகள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர மூன்றடுக்கு நோய்த்தடுப்பு முறையை முன்னெடுக்கவேண்டும் என்று தொடர்ந்து சௌமினி பேசியும் இயங்கியும் வந்தார். “அதிலும் கடலூர், கல்வராயன் மலை போன்ற பின் தங்கிய பகுதிகளில் அதிகமாகப் பரவி வந்த பால்வினை நோய்களை ஆய்வு செய்து அவற்றைக் கட்டுப்படுத்த அரசுக்கு ஆலோசனை வழங்கினார். சத்தமே இல்லாமல் சமூக நலனுக்காக உழைத்து வந்தார்”, என்று பிரேமலதா சொல்கிறார்.

ரகசிய நோய்களுக்கு சரிவர மருத்துவம் செய்யாமலே ஆண்களும் பெண்களும் ‘மானமே போய்விடும்’ என்று அறியாமையால் உயிரிழந்து கொண்டிருந்த காலத்தில், அவர்களின் கலங்கரை விளக்காக பெண் மருத்துவர் ஒருவர் பொது மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் பணியாற்றியது பெரும் சாதனை. இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் அந்த காலகட்டத்தில் முன்னெடுத்த பல திட்டங்களின் கிரியா ஊக்கியாக சௌமினி இருந்தார். ஏற்கனவே மருத்துவக் கவுன்சில் முன்னெடுத்த மத்திய பால்வினை நோய் குறிப்பு ஆய்வகத்தின் திட்டங்களும், சௌமினி வகுத்துக் கொடுத்த பால்வினை நோய்களுக்கு எதிரான பொது சுகாதார திட்டங்களும் 1970-1980களில் பால்வினை நோய்களுக்கு எதிரான பெரும் போரை முன்னெடுக்க அரசுக்கு உதவின.

1975ம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் 28வது உலக சுகாதார கூட்டத்தில் வளரும் நாடுகளின் சார்பாக கலந்துகொண்டு சௌமினி உரையாற்றினார். இங்கு தான் சௌமினி வரலாற்று முக்கியத்துவமிக்க உரையாற்றினார். “வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் பரவலாக பால்வினை நோய்கள் இருக்கின்றன. ஆனால் வளரும் நாடுகளில் பால்வினை நோய்களுக்கு எதிராக போராடுவது இன்னும் சிக்கலானது.”

“குறிப்பாக கிராமப்புறங்களில் சமூக பொருளாதார பிரச்னைகள் தாண்டி இந்த நோய்க்கான சிகிச்சையை முன்னெடுப்பது சவாலானது. கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் என் பணியிலும், இந்தியாவில் பால்வினை நோய்க்கெதிரான நடவடிக்கைகளை எடுக்கும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வெனராலஜியின் அனுபவத்திலும் நாங்கள் இதை உணர்ந்திருக்கிறோம். ஒரு காலத்தில் பால்வினை நோய்கள் நகரங்களிலும், குடிசைப்பகுதிகளிலும் பரவலாக இருந்தன; ஆனால் இப்போது அதுவும் மாறியிருக்கிறது.”

“மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள், ஆய்வு வசதிகள் காரணமாக இன்று இந்த நோய்கள் பல இடங்களிலும் பரவியுள்ளதை அறிகிறோம். வளரும் நாடுகளில் ஏற்படும் புதிய மாற்றங்கள் காரணமாக இரு பாலினரும் அதிகம் கலந்து பழக வாய்ப்புகள் ஏற்படுவதை இன்று பார்க்கிறோம். இதன் காரணமாக திருமணத்துக்கு அப்பாற்பட்ட மற்றும் திருமணத்துக்கு முந்தைய பாலியல் தொடர்புகள் ஏற்படுகின்றன; இதன் மூலம் பால்வினை நோய்களும் பெருகிவருகின்றன. வளர்ந்துவரும் இந்த சிக்கலுக்கு சரியான தீர்வுகள் இருந்தும் அவற்றை சரிவர பயன்படுத்தாத காரணத்தால் இதுபோன்ற நோய்களின் தாக்கம் குறையவில்லை. அரசுகளும் கையிருப்பை செலவு செய்யவேண்டிய பல சமூக பிரச்னைகள் இருக்கும் சூழலில், பால்வினை நோய்கள் பரவுவதைத் தடுக்க வேண்டிய அவசியத்தை அரசுகளுக்கு உணர்த்தி செயலாற்றச் செய்யவேண்டும்”, என்றும் இந்தக் கூட்டத்தில் சௌமினி பேசியிருக்கிறார்.

மூத்த மருத்துவர் திரு.அகஸ்டின், “ நான் முதுநிலை பட்டப்படிப்பு சேர்ந்த போது – 1970களில் அவர் வெனிரியாலஜி துறையின் தலைவராகப் பணியாற்றிவந்தார். நான் முதலாம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த போது அவர் தான் எனக்கு வழிகாட்டி. அப்போது அவர் எனக்கு நிறைய உதவிகள் செய்தார்.”

“மற்றபடி மூத்த சரும நோய் மருத்துவர் தம்பையா அவர்களை சந்தித்துப் பேச வருவார். அவர்கள் இருவரும் நல்ல நட்புடன் இருந்தார்கள். ஒரு காலத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். தம்பையாவின் அம்மா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் இருவருமே திருமணம் செய்துகொள்ளாமல், கடைசி வரை நல்ல நட்புடன் தொடர்ந்தார்கள். தம்பையா சரும நோய்த் துறையின் தலைவராக அப்போது பணியாற்றிவந்தார். நான் தம்பையாவின் மாணவனாக, துணை மருத்துவராகப் பணியாற்றினேன்”, என்று உதிர்ந்து போன ஒரு காதல் கதையை நினைவு கூர்கிறார்.

மருத்துவர் பிரேமலதா சௌமினியின் விருந்தோம்பலை வியந்து சொல்கிறார். “பூந்தமல்லி சாலையில் அவரது வீடு இருந்தது. கடைசி வரை தனியாகவே வாழ்ந்தார். அவர் இறப்பதற்கு ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நலமின்றி அவதியுற்ற அவரைக் காண வீட்டுக்குச் சென்றேன். நடக்கவே சிரமப்பட்டவர், ஃபிரிட்ஜ் வரை மெல்ல நடந்து சென்று அதைத் திறந்து, ஸ்டூல் ஒன்றைப் போட்டுக்கொண்டு அதனருகே அமர்ந்தபடியே எனக்கு ஜூஸ் கலந்து தந்தார். அதை என்னால் மறக்கவே முடியாது. எத்தனை நல்ல பண்பு அது?”, என்று வியக்கிறார்.

“சமூக அக்கறை மிக்கவர் சௌமினி. பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்களின் வாழ்க்கையை முன்னேற்ற தன்னாலான பணிகளை சத்தமின்றி செய்துவந்தார். சமூகம் அவர்களைப் பார்க்கும் பார்வையே மாறவேண்டியுள்ளது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் பால்வினை நோய்களைக் கண்டறியும் வி டி ஆர் எல் ஆய்வுக்கூடம் அவரது பெருமுயற்சியால் உருவானது. மருத்துவர் சாக்கோவை அழைத்து வந்து அதன் திறப்பு விழாவை நடத்தினார். யோகேசுவரி, கோபாலன் போன்ற திறமைவாய்ந்த மருத்துவர்கள் அப்போது அங்கு பணியாற்றியவர்கள்.”

“தமிழகம் மற்றும் புதுவை மகளிர் மருத்துவ சங்கத்தை நிறுவியவர் சௌமினி, தொடர்ச்சியாக அதன் கூட்டங்களை பல்வேறு நகரங்களில் நடத்தினார். பின்னாளில் அந்த அமைப்பின் தலைவராக நானும் இருந்திருக்கிறேன். ஆனால் பிற நகரங்களில் இன்று அந்த சங்கம் அத்தனை உறுதி குறைந்து போனது. சென்னையில் மட்டுமே அதன் கூட்டங்கள் நடக்கும் என்ற நிலை வந்தது. ஆனால் சௌமினி அதன் கௌரவ தலைவராக இருந்த போது மாநிலம் முழுக்க அதன் கூட்டங்களை நடத்தி பெண் மருத்துவர்களிடையே பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்”, என்றும் மருத்துவர் பிரேமலதா சொல்கிறார்.

தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் பால்வினை நோய்கள் ஆலோசனைக் குழுவில் கௌரவ உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றினார். அவரது தலைமையில் கடலூரை அடுத்த தியாகவல்லி உள்ளிட்ட உப்பங்கழிப் பகுதிகளில் அதிகம் பரவியிருந்த பால்வினை நோய்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டன. நாட்டின் இரண்டாவது பால்வினை நோய்கள் மற்றும் சரும தொற்றுநோய்களுக்கான மாநாட்டை நடத்த உறுதுணையாக இருந்தார். பால்வினை நோய்கள் குறித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் மருத்துவ நூல்களை எழுதியிருக்கிறார். இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சிலின் கௌரவ அறிவியலாளராக பணி ஓய்வுக்குப் பின் நியமிக்கப்பட்டார்.

கடந்த 2000ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், அதன் அண்ணா அறிவியல் நகரும் இணைந்து சௌமினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தன. 2004ம் ஆண்டு பாங்காக் நகரில் சர்வதேச பால்வினை நோய்த் தொற்று காங்கிரஸ் சங்கக் கூட்டம் ‘சீனியர் ஃபெல்லோஷிப்’ வழங்கி சௌமினியைப் பாராட்டியது.

பால்வினை நோய்களுக்கு எதிரான தனி அமைப்பை ஏற்படுத்தி போராடவேண்டிய அவசியத்தை உணர்ந்த சௌமினி, ‘பால்வினை தொற்றுநோய்ப் படிப்புக்கான இந்திய சங்கம்’ (Indian Association for the Study of Sexually Transmitted Diseases) அமைப்பை 1975ம் ஆண்டு தொடங்கி வழிநடத்தினார். பின்னாளில் அந்த அமைப்பு பால்வினை தொற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் படிப்புக்கான இந்திய சங்கம் என்று பெயர் மாற்றமடைந்தது. அதன் தலைவராக எட்டாண்டுகள் வழிநடத்திய பின் இளையோருக்கு வழிவிட்டு பதவி விலகினார். ஆனாலும் அவரது வழிகாட்டல் தேவை என்பதால் அந்த அமைப்பு 1983ம் ஆண்டு அவரை தங்கள் நிரந்தர புரலவராக்கியது.

முதுமை காரணமாக ஜனவரி 9, 2012 அன்று சௌமினி மறைந்தார். ஒன்றிரண்டு புகைப்படங்களும், அவரது ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்களுமே அவர் நமக்கு விட்டுச்சென்றுள்ள பெரும் சொத்து. தமிழகம் மறந்து போன மாபெரும் பெண் ஆளுமைகள் பட்டியலில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய பெயர் டாக்டர் சி.என்.சௌமினி.

படங்கள் நன்றி: மருத்துவர் பிரேமலதா சுப்ரமணியன்

-கட்டுரையாளர் குறிப்பு

நிவேதிதா லூயிஸ்

சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த "முதல் பெண்கள்" என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் "ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை" என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொளிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவை தொடர்ந்து ஆற்றிவருகிறார்.

.

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வெள்ளி 26 மா 2021