சென்னையில் எங்கெங்கே தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?

public

சென்னையில் எங்கெங்கே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என கூகுள் வரைபட வழிகாட்டியுடன் கூடிய முகவரிகள் மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என மாநகராட்சி நிர்வாகம் கருதுகிறது. அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர், அந்த மையங்களை எளிதில் அணுகும் வகையில், மையங்களின் கூகுள் வரைபட வழிகாட்டியுடன் கூடிய முகவரி விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நேற்றைய (மார்ச் 24) நிலவரப்படி, சென்னை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கடந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 35,000 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 60,000 பேருக்குத் தடுப்பூசி போடும் அளவுக்கு வசதிகள் உள்ளன. அதனால் தினமும் 60,000 பேருக்குத் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நேரு உள் விளையாட்டு அரங்கம், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போடும் முகாம்களை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்போர் நலச்சங்க உதவியுடன், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தடுப்பூசி போடும் முகாம்களை நடத்தி வருகிறது.

சென்னையில் மாநகராட்சியின் 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 சமுதாய நல மையங்கள், தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனை, 19 இடங்களில் உள்ள மத்திய, மாநில அரசு மருத்துவமனைகள், 175 தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர், தடுப்பூசி மையங்களை எளிதில் அணுக ஏதுவாக அந்த மையங்களின் அமைவிடம் குறித்த கூகுள் வரைபட வழிகாட்டியுடன் கூடிய முகவரிகள் **[மாநகராட்சியின் இணையதளத்தில்](https://chennaicorporation.gov.in/gcc/covid-vaccine/)**வெளியிடப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *