மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

வெடி வைப்பு - வீடுகளில் அதிர்வு: கிராம மக்கள் மறியல்!

வெடி வைப்பு - வீடுகளில் அதிர்வு: கிராம மக்கள் மறியல்!

வெடிபொருட்களைச் செயலிழக்க வைக்கும்போது வீடுகளில் அதிர்வு ஏற்படுவதாக கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை சிலவற்றுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து இரும்பு துகள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில் ஈரான், ஈராக் போரின்போது பயன்படுத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர் உட்பட பல வெடிபொருட்கள் வெடிமருந்துகளுடன் கலந்து வந்திருப்பது தெரியவந்தது.

உரிய அனுமதியுடன் அவற்றை வெடித்து செயலிழக்க வைக்கும் பணியைக் கடந்த 20ஆம் தேதி முதல் கும்மிடிப்பூண்டி அடுத்த ராமச்சந்திராபுரத்தில் வனத்துறைக்குச் சொந்தமான காலி மைதானத்தில் ராணுவத்தினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மேற்கண்ட வெடிபொருட்களைச் செயலிழக்க வைக்கும்போது அருகே மாநெல்லூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் பலத்த அதிர்வுகள் ஏற்படுவதாகவும், இதய நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் புகார் கூறி கிராம மக்கள் ராமசந்திராபுரத்தில் பாதிரிவேடு சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வெடிபொருட்களை வெடித்து செயலிழக்க வைக்கும் பணியை நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கும்மிடிப்பூண்டி போலீஸார், பேராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினை தொடர்பாக ஒரு மனுவை தாசில்தார் அலுவலகத்தில் கொடுக்குமாறு கூறினர்.

வெடிபொருட்களைச் செயலிழக்கும் பணியைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகவும், ஆர்டிஓ மற்றும் தாசில்தார் அனுமதியைப் பெற்றே இந்தப் பணி மீண்டும் தொடரும் என போலீஸார் தெரிவித்தனர். இதை ஏற்றுகொண்ட கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் நேற்று (மார்ச் 24) ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 25 மா 2021