மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

வீராணத்தில் இருந்து இன்னும் 10 நாட்கள் மட்டுமே சென்னைக்குக் குடிநீர்!

வீராணத்தில் இருந்து இன்னும் 10 நாட்கள் மட்டுமே சென்னைக்குக் குடிநீர்!

வெயிலின் தாக்கம் தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வீராணம் ஏரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் சென்னைக்கு விநாடிக்கு 70 கன அடி நீர் அனுப்பப்பட்டு வந்தது படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. இந்த ஏரியிலிருந்து சென்னை மாநகருக்குக் குடிநீர் அனுப்பப்படுகிறது. அதோடு பாசன வசதிக்கும் இந்த ஏரி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, கீழணைக்குத் தண்ணீர் வந்ததால் அந்த அணையிலிருந்து வீராணம் ஏரிக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் உச்ச நீர்மட்டமான 47.50 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது.

கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழை காரணமாகவும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், பொதுப்பணித்துறையினர் ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் மதகு வழியாக விநாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீரைக் கடலுக்கு அனுப்பினர். முழுவதையும் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு வெளியேற்றினர்.

மேலும் வீராணம் ஏரிக்கரைச் சாலையில் காட்டு மன்னார்கோயிலிலிருந்து சேத்தியாத்தோப்பு வரை தடுப்புக் கட்டைகளின் உயரத்தை அதிகரிக்கும் வகையிலும், ஏரியின் உள்பகுதியில் சேதமடைந்த தடுப்புச் சுவரை சீரமைக்கும் நோக்கிலும் கடந்த இரண்டு மாதங்களாக ஏரிக்கு தண்ணீர் வரத்தை பொதுப்பணித்துறையினர் முற்றிலும் நிறுத்தினர். இதனால் ஏரியில் மழைக்காலத்தில் தேக்கப்பட்ட தண்ணீர் சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு மட்டும் அனுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், "தற்போது கடும் வெயில் வறுத்து எடுப்பதால் ஏரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. சென்னைக்கு விநாடிக்கு 70 கன அடி நீர் அனுப்பப்பட்டு வந்த நிலையில், இந்த அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்றைய (மார்ச் 22) நிலவரப்படி விநாடிக்கு 5 கன அடி நீர் மட்டுமே சென்னைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 39.53 அடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் தற்போது 54 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. ஏரியில் தற்போதுள்ள நீரைப் பயன்படுத்தி 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்குக் குடிநீர் அனுப்ப முடியும்" என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது சென்னைக்குக் குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் மட்டமும் கோடையின் தாக்கத்தால் கடந்த இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 23 மா 2021