மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

காரைக்காலைக் கலக்கும் அதிகாரிகள் தம்பதியர்!

காரைக்காலைக் கலக்கும் அதிகாரிகள் தம்பதியர்!

புதுச்சேரி ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த காரைக்கால் மாவட்டத்தின் ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரியாக இருப்பவர், அர்ஜுன் சர்மா. அவரின் மனைவி நிகாரிகா பட், காரைக்கால் மாவட்டத்தின் முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கிறார். இவர்கள் இருவரும் தேர்தல் தொடர்பாக புகார் ஏதும் வந்தால், உடனடியாக ஸ்பாட்டுக்குச் சென்று நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

மாவட்டத்தில் சரக்குக் கடத்தல், சட்டவிரோதமாக டாஸ்மாக் மதுவை விற்பனை செய்வது, அனுமதி இல்லாமல் ஓட்டல்களில் பார் நடத்துவது ஆகியவை தொடர்பாக, கடுமையாக நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். இதனால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அதிர்ந்துபோய் இருக்கிறார்கள்.

காரைக்கால் தெற்கு பகுதியில் நியூலாண்ட் ரம்யா ஓட்டலில் பார் நடத்த உரிமம் பெறவில்லை. ஆனால், அங்கு சட்டத்துக்குப் புறம்பாக பீரும் பிராந்தி, விஸ்கிவகைகளுமாக பெட்டிபெட்டியாக மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்துள்ளன.

தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, போலீஸ் உதவியுடன் ஸ்பாட்டுக்குச் சென்று ரெய்டு செய்தார். அங்கிருந்த மதுவகைகளையும் கைப்பற்றினார்கள். அவற்றின் மதிப்பு 2.25 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதிலென்ன பெரிய சமாச்சாரம் எனக் கேள்வி எழக்கூடும். அது இயல்புதான். உண்மையில் இது முக்கியச் செய்தியும் அல்ல. தேர்தல் சமயத்தில் இதைவிட இன்னும் அதிகமாக, பதுக்கிவைக்கப்பட்ட வகைவகையான மதுபானம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதும் ஒவ்வொரு முறையும் தொடர் கதையாகிவிட்டது.

காரைக்காலில் இப்போது பறிமுதல் செய்யப்பட்ட மதுவகைகளை ஆய்வுசெய்யவும் ஆட்சியர் உத்தரவிட்டார். அப்படி செய்துபார்த்தபோது, அவற்றில் கணிசமான மதுபானம், காலாவதியான கெட்டுப்போன சரக்கு என்பது தெரியவந்தது.

பணத்துக்காக சட்டவிரோதமாக விற்பனை செய்வது மட்டுமின்றி, அதை நம்பி விலைக்கு வாங்கிக் குடிக்கும் யார் எவராக இருந்தாலும் அவர்களை பாதிக்கும் எனத் தெரிந்தும் அதைச் செய்திருப்பது, இன்னும் ஒரு படி மேலான குற்றம் அல்லவா?

எனவே, உரிமம் பெறாமலும் உயிராபத்தை உண்டாக்கும் வகையிலும் மதுபானம் விற்ற ஓட்டல் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், தற்போது காரைக்கால் மாவட்டத்தில் சிறு குற்றங்கள் முதல் பெரிய குற்றங்கள்வரை, ஆட்சியரும் காவல்துறை அதிகாரியும் இணைந்து தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் தவறான செயல்பாடுகளில் இருக்கும் அரசியல்வாதிகளோ அரண்டுபோய் இருக்கிறார்கள்.

கணவர் மாவட்ட ஆட்சியராகவும், முதுநிலை காவல் கண்காணிப்பாளராக மனைவியும் இப்படி அசத்தலாக நடவடிக்கை எடுத்துவருவதாக மனம்குளிரப் பாராட்டுகிறார்கள், மாவட்டத்தில்.

அவர்களுடைய விருப்பம் எல்லாம், நன்கு செயல்படும் இந்தத் தம்பதியரின் பொருட்டு மட்டுமின்றி, யார் வந்தாலும் இந்த நிலைமை இப்படியே தொடரவேண்டும் என்பதுதான்!

- வணங்காமுடி

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

செவ்வாய் 23 மா 2021