கிச்சன் கீர்த்தனா: சிறு உருளை - மிளகு வறுவல்

ஆண்டீஸ் மலைப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான உருளைக்கிழங்கு வகைகள் விளைகின்றன. இத்தனை வகை உருளைக்கிழங்குகள் இருந்தாலும், உலகின் பல பகுதிகளில் விளைவிக்கப்படும் உருளை வகை சிலி நாட்டைச் சேர்ந்ததே. அவற்றில் குறிப்பிடத்தக்கது சிறு உருளைக்கிழங்கு. சிறு உருளையை வைத்து செய்யப்படும் இந்த உருளை – மிளகு வறுவல் அனைவருக்கும் ஏற்றது. மீண்டும் சுவைக்கத் தூண்டுவது.
என்ன தேவை?
சிறிய உருளைக்கிழங்கு - 200 கிராம்
மிளகுத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன் (ஒன்றிரண்டாகத் தட்டவும்)
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு (நசுக்கவும்)
பூண்டு - 2 பல் (தட்டவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 8 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்கை நன்கு கழுவி, சிறிய க்யூப்ஸ் அல்லது துண்டுகளாக வெட்டவும். தோலை உரிக்கத் தேவை இல்லை (விருப்பப்பட்டால் உரித்துக்கொள்ளலாம்). பாத்திரத்தில் தண்ணீருடன் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதில் உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும். (இப்படிச் செய்வதால் வறுத்த உருளைக்கிழங்கு மொறுமொறுப்பாக இருக்கும்). வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு துண்டுகள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து வதக்கவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து வெந்த பிறகு மிளகுத்தூள் சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் புரட்டி இறக்கவும்.