zகொரோனா விதிகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை!

public

சென்னையில் கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்களில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றவில்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே அதிகமாக பரவி வருகிறது. இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் தரமணி, பெருங்குடி மற்றும் கந்தன்சாவடி ஆகிய மூன்று கிளைகளில் 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில்,” கொரோனா அதிகமாக பரவி வருகின்ற நிலையில், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத கடைகள், காய்கறி அங்காடிகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் மீது தொற்று நோய்கள் சட்டம் 1897 பிரிவு 2-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், சானிடைசர் கொண்டு அடிக்கடி கைகளை கழுவுதல், வெப்பநிலை பரிசோதனை செய்தல் உள்ளிட்டவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள நிறுவனங்கள் அறிவுறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

**இரண்டு மடங்கு அதிகரிப்பு**

தமிழகத்தில் பத்து நாட்களுக்கு முன்பு நூறு பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படும். தற்போது நூறு பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால், இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. பொது இடங்களில் கொரோனா ரேண்டம் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனால், நாள்தோறும் 50 ஆயிரம் பேருக்கு போடப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி தற்போது 70 ஆயிரம் பேருக்கு போடப்பட்டு வருகிறது என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

**பிற மாநிலங்களில் கட்டுப்பாடு**

மகாராஷ்டிராவில் 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகள், தனியார், அரசு அலுவலகங்கள் 50% நபர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

குஜராத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் வண்ணபொடி பூசுதல் உள்ளிட்ட பொதுநிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்துக்குள் வரும் பிற மாநிலத்தவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

கோவா, சத்தீஸ்கர், அந்தமான் உள்ளிட்ட இடங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

**வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *