மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

தமிழகம்: பணம், நகைக்காக அதிகரிக்கும் கொலைகள்!

தமிழகம்: பணம், நகைக்காக அதிகரிக்கும் கொலைகள்!

தமிழகத்தில் பணம், நகை பொருட்களுக்காக நடைபெறும் கொலைகள் தொடர்கதையாகி வருகிறது.

சென்னையை அடுத்த மாதவரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரவி (52), கலா (47). சென்னை சவுகார்பேட்டையில் பைனான்சியராக ரவி வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் உமேஷ், புனேயில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெங்களூருவைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் இவர்களது வீட்டில் காவலாளியாக வேலைக்கு அமர்த்தப்பட்டார். அவர் தனது குடும்பத்துடன் அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை ரவி, தனது மனைவிக்கு நீண்ட நேரம் போன் செய்தும், எடுக்காத காரணத்தினால், சந்தேகமடைந்து, அவர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். வீட்டின் உள்ளே தனது மனைவி கலா, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது காவலாளியாக இருந்த ராகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடியபோது அவர்கள் காணவில்லை.

இதுகுறித்து மாதவரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து, போலீசார் நடத்திய விசாரணையில், புதிதாக காவலாளி வேலைக்கு சேர்ந்த ராகேஷ், கலா வீட்டில் உள்ள நகைக்கு ஆசைப்பட்டு, வீட்டில் தனியாக இருந்தபோது அவரது கை, கால்களை கட்டிப்போட்டு, கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, மொத்தம் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது. தற்போது, போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

நந்தனம்.

சென்னை நந்தனம் 6ஆவது தெருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில், கடந்த 13 ஆம் தேதி ராமகிருஷ்ணன் என்ற முதியவரிடம் 10 பவுன் தங்க நகை மற்றும் காரை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கையில் தலைமறைவாக இருந்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ராகப்பன் என்ற ரவிகுமார் (42), அனகாபுத்தூரை சேர்ந்த சீனிவாசன் (45), ஏழுமலை என்ற ரஜினி ஏழுமலை (55), மயிலாப்பூரை சேர்ந்த வெங்கடேசன் என்ற கருக்கா வெங்கடேசன் (44), கோட்டூர்புரத்தை சேர்ந்த நெல்சன் (47), ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த மதன்ராஜ் (46) ஆகிய 6 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கைதான 6 பேரையும் சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில் அவர்கள், முதியவர் ராமகிருஷ்ணனிடம் வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும், கைதான ராகப்பன், கிண்டி நீச்சல் குளம் அருகே வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள காலி இடத்தில், நாங்கள் 6 பேரும் சேர்ந்து 2 பேரை கொலை செய்து, அவர்களது உடலில் கல்லைக்கட்டி கிணற்றில் வீசியதாக போலீஸாரிடம் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

இதையடுத்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர், மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் நேற்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் வீசப்பட்ட 2 பேரின் உடல்களை தேடினர். சுமார் 4 மணிநேர தேடுதலுக்கு பிறகு கிணற்றில் வீசப்பட்ட 2 பேரின் உடல்களை அழுகிய நிலையில் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் கொலையானவர்கள், வடபழனியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகரான அண்ணாதுரை (55) மற்றும் சென்னை சூளைமேட்டை சேர்ந்த தங்கபாண்டி (34) என தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸாரிடம் ராகப்பன் அளித்துள்ள வாக்குமூலத்தில், “ கொலையான அண்ணாதுரையின் உறவினரான ஆனந்தராஜ் என்பவருக்கும், ஆவடி கவுன்சிலரான பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இதனால் அண்ணாதுரை சொன்னதால் நான், எனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து கவுன்சிலர் முருகனை கொலை செய்தோம்.

இந்த கொலை வழக்கு நடத்த செலவுக்கு பணம் தராமல் அண்ணாதுரை ஏமாற்றி வந்தார். கடந்த 8-ந்தேதி வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு சென்றபோது, அண்ணாதுரையிடம் வழக்கு விசாரணைக்கு பணம் கேட்டோம். அப்போதும், மீண்டும் எங்களுக்குள் பிரச்சினை எழுந்தது. கிண்டியில் பாழடைந்த நிலத்தில் காவலாளியாக பணியாற்றும் எனது கூட்டாளி நெல்சன் (47) என்பவரிடம் இதுதொடர்பாக கூறினேன். அதற்கு நெல்சன், கிண்டியில் இடம் பார்க்க வருமாறு அண்ணாதுரையை அழைத்து வந்து பேசிகொள்ளலாம் என்றார்.

அதன்படி வெங்கடேசன் மூலமாக அண்ணாதுரையை கடந்த 9-ந்தேதி கிண்டிக்கு அழைத்தோம். அண்ணாதுரையுடன், சூளைமேட்டை சேர்ந்த தங்கபாண்டி என்பவரும் வந்தார். அவர்கள் இருவருடன், நாங்கள் 6 பேரும் சேர்ந்து அனைவரும் கிண்டியில் உள்ள அந்த காலி இடத்தில் வைத்து ஒன்றாக மது அருந்தினோம்.

அப்போது, கவுன்சிலர் கொலை வழக்கு செலவுக்கு பணம் தரும்படி மீண்டும் அண்ணாதுரையிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் 6 பேரும் அண்ணாதுரையை சரமாரியாக தாக்கினோம். இதை தடுக்க முயன்ற தங்கபாண்டியையும் தாக்கினோம். இதில் 2 பேரும் இறந்துவிட்டனர். யாருக்கும் தெரியாமல் இருக்க இருவரது உடலிலும் கல்லைக்கட்டி அங்குள்ள பாழடைந்த கிணற்றில் வீசி விட்டோம்” என தெரிவித்தார்.

கொலை சம்பவத்துக்கு பிறகு செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் முதியவர் ராமகிருஷ்ணனிடம் வழப்பறி செய்து உள்ளனர். அந்த வழப்பறி வழக்கில் கைதானதால், இந்த இரட்டை கொலை விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சக்தி பரமசிவன்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

திங்கள் 22 மா 2021