சிட்டு குருவிகளை திரும்ப பார்க்க முடியுமா?

public

வளர்ந்துவரும் இயந்திர எலக்ட்ரானிக் நவீன உலகில் தென்மாவட்டங்களில் அதிகம் சுற்றி திரியும் பறவைகளில் ஒன்றான சிட்டுக்குருவிகளின் கூட்டம் சில ஆண்டுகளாகவே வெகுவாக குறைந்துவிட்டது.

இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதிகளான கம்பம், தேனி ,வத்ராய்ப்பு, ஶ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்,சிவகிரி தென்காசி ,பாபநாசம் பகுதிகளில் விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என பசுமையான நெல்வயல்கள் கரும்பு தென்னை மாந்தோட்டங்கள் அதிகமிருப்பதால் இந்த பகுதிகள் சிட்டுகுருவிகளின் வசிப்பிடமாகவே இருந்தது.

திடீரென கீச் கீச் சத்தமிட்டு ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகள் பசுமை வயல்வெளிகளுக்கு மேலே வானவில்போல் பறந்து செல்லும் அழகே பார்க்க பார்க்க ரசனைக்குரியதாக இருக்கும். இங்குள்ள விவசாயிகள் வீடுகளில் மிக அழகாக வைக்கோலால் கூடு கட்டி வசிக்கும் . யாரும் அதை துன்புறுத்தமாட்டார்கள் ஏனென்றால் சிட்டுக்குருவிகள் இப்பகுதியில் அதிகம் வசிக்கும் போது தென்மேற்கு பருவமழை வடகிழக்கு பருவமழை தவறாது போதியளவில் பெய்யும்.சிட்டுக்குருவிகள் இடும் எச்சம் பயிர்களுக்கு ஊட்டச்சத்து என்றும் விவசாயிகள் கருதுவார்கள்.

இப்போதெல்லாம் வளர்ந்து வரும் எலக்ட்ரானிக் உலகில் இப்பகுதியில் சிட்டுக்குருவிகளை பார்ப்பது அரிதாகிவிட்டது. செல்போன் டவர்களில் வரும் கதிர்வீச்சு சிட்டுக்குருவிகள் இனத்தை அழிப்பதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்டு வெளிநாடுகளில் வசிக்கும் 34 வகை பறவை இனங்களில் சிட்டுக்குருவிகள் முதலானது.

அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி உலகச் சிட்டுக் குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பறவை இனங்களில், சிட்டுக்குருவி மட்டுமே தனிக்கூடு கட்டாமல், வீடுகளில் உள்ள துவாரங்களில், இடுக்குகளில் சருகுகளைக் கொண்டு தனக்கென ஓர் இடம் அமைத்துக்கொள்ளும். அப்போதிருந்த வீடுகளில் நகரில்,கிராமத்தில் சிட்டுக் குருவிகளுக்கான இடம் இருந்தது.

தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்தபோது கூட சிட்டுக் குருவிகள் வாழ்ந்து வந்தன. ஆனால், மக்கள் நவீனமயமாக்கலுக்கு மாறிவரும் நிலையில் சிட்டுக் குருவிகள் நகரங்களை விட்டுப் பறந்துவிட்டன.

செல்போன் வருகைக்குப் பின் சிட்டு குருவிகளின் அழிவு அதிகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குருவியின் கருவை சிதைப்பதாகவும், முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாவதாகவும் கூறப்படுகிறது.

இப்போது நவீன வீடுகளில் வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி அடுக்குமாடிக் குடியிருப்புகள். குளிரூட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் மீத்தைல் நைட்ரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றனவாம்.

இப்போது எல்லாம் இயந்திரமயமானதால் வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை. வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் பெரும்பாலான இடங்களை விட்டு காலி செய்யத் தொடங்கின.

நகரங்களில் கிராமங்களில் இருந்த தோட்டங்கள், புதர்ச்செடிகள் வெகுவாகக் குறைந்துபோனது, பறவைகள் கூடு கட்ட ஏதுவான இடங்கள் இல்லாமல் போனது, முட்டை பொரிக்கும் காலங்களில் புழு, பூச்சிகளின் தட்டுப்பாட்டினால் குஞ்சுகளுக்கு சரியான இரையில்லாமல் போவது போன்றவையே காரணமாக இருக்கலாம் என்றே பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.பல வீடுகளில் செல்லபிள்ளைகளாய் வளர்ந்த சிட்டுக்குருவிகளை பசுமை வயல்வெளிகள் நிறைந்த பகுதியில் கூட எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது.

**சக்தி பரமசிவன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *