மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 மா 2021

தஞ்சையில் பள்ளிகள் மூடப்படுமா?

தஞ்சையில் பள்ளிகள் மூடப்படுமா?

தஞ்சை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் புதிதாக 21 மாணவ-மாணவிகள், மகளிர் பள்ளியில் 6 மாணவிகளுக்கு தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் மாவட்டம் முழுவதும் மொத்த பாதிப்பு 115ஆகியுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை அம்மாபேட்டை அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே 57 மாணவிகள், 1 ஆசிரியை, மாணவிகளின் பெற்றோர் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, மொத்த பாதிப்பு 69-ஆக உயர்ந்தது.

இதேப்போல் பட்டுக்கோட்டை அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கும், மதுக்கூர் அருகே ஆலத்தூர் பள்ளியில் ஆய்வக பெண் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தஞ்சையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி, அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில் நடத்திய பரிசோதனையில் நேற்று 4 ஆசிரியர்-ஆசிரியைகள், 1 மாணவிக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கும்பகோணத்தில் 2 பள்ளிகளில் 3 ஆசிரியர்கள், 7 மாணவ-மாணவிகளுக்கும் பாதிப்பு உறுதியானது.

இந்நிலையில் நேற்றைய பரிசோதனை முடிவுகளில் தஞ்சை தனியார் பள்ளியில் புதிதாக 21 மாணவ-மாணவிகள், மகளிர் பள்ளியில் 6 மாணவிகளுக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இதேபோல் தஞ்சை அடுத்த வல்லத்தில் உள்ள ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 2 மாணவர்களுக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 7 பள்ளிகள் மற்றும் 1 பல்கலைக்கழகத்தில் 97 மாணவ-மாணவிகள், 8 ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 115-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பரிசோதனை செய்யப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பலரின் முடிவுகள் வர வேண்டி உள்ளதால் பாதிப்பு மேலும் அதிகரிக்குமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது.

தொடர்ந்து பள்ளியில் பரவி வந்த கொரோனா தற்போது பல்கலைக்கழகத்திலும் தாக்கத்தை தொடர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வேகம் உச்சத்தில் உள்ளது. இதற்கு முன் பொதுமக்களை தாக்கிய கொரோனா தற்போது மாணவர்களை தாக்கி வருகிறது.ஏற்கனவே திருச்சி அரசு கல்லூரி மாணவர்கள் 15பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அச்சம் நிலவுகிறது. பெற்றோர்கள் பலர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. பாதிக்கப்பட்ட பள்ளிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது, மற்ற பள்ளிகளில் வகுப்புகள் நடக்காமல் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுகாதார துறையினர், மருத்துவ பணியாளர்கள் முகாம் அமைத்து கொரோனா பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள 439 பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என 2 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுவார்கள் என்று மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தற்காலிகமாக மூட வேண்டும். பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும். கொரோனா முற்றிலும் குறைந்த பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் அரசியல் கட்சியினர் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சக்தி பரமசிவன்

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

சனி 20 மா 2021