ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை!

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,” தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் முதல் அலுவலக உதவியாளர்கள் உட்பட அனைவரும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் மற்றும் கட்டுப்பாடு நெறிமுறைகளுக்கு உட்பட்டவர்கள். அதனால், ஆசிரியர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக செயல்படக் கூடாது.
ஆசிரியர்கள் சமூக ஊடகங்கள் மூலமாகவோ, சங்கங்கள் மூலமாகவோ எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது. அது பள்ளிக்கல்வித்துறை விதிகளுக்கு எதிரானது என சட்டம் உள்ளது. ஆனால் அந்த சட்டத்தை மீறி சில பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் அரசியல் கட்சியினருக்கு ஆதரவாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் வந்துள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை விதிக்கு மாறாக செயல்பட கூடாது. இதனை மீறி அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக ஆசிரியர்கள் செயல்பட்டால், அவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களும், எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டவோ, பரப்புரையில் ஈடுபடவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வினிதா