மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 மா 2021

வாரத்திற்கு ஒருநாள் தடுப்பூசி முகாம்!

வாரத்திற்கு ஒருநாள் தடுப்பூசி முகாம்!

சென்னையில் வாரத்திற்கு ஒருநாள் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று(மார்ச் 20) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இங்கு 20 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு 2000 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு முகாமில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ளவர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

சிறப்பு முகாமை பார்வையிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ”சென்னையின் பிற பகுதியிலும் வாரத்திற்கு ஒருநாள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையம் அமைக்கவுள்ளோம்.

ஒருநாளைக்கு 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தக் கூடிய அளவு வசதி உள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 350 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று வரை 4.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

சென்னையில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேர் என 45 நாள்களில் 30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை அந்தளவிற்கு பாதிப்பு இல்லை. இருப்பினும், மக்கள் தாமாகவே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். வீடுகளில் பணி செய்ய வருபவர்கள், காவலாளி, ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுனருக்கு அடுத்தகட்டமாக தடுப்பூசி போடப்படும் என கூறினார்.

நிலவரம்

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,64,450ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 9 பேர் பலியாகியுள்ளநிலையில் மொத்த பலி எண்ணிக்கை 12,582ஆக உயர்ந்துள்ளது. 610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,45,178 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 6,690 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கேரளாவில் இன்று புதிதாக 1984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்த பாதிப்பு 11,00276ஆக உயர்ந்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் கேரளாவில் தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகமாகிவரும் நிலையில் இருமாநில எல்லைப்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு அபராதம்

தஞ்சாவூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக செயல்பட்ட இரண்டு பள்ளிகளுக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் மொத்தமாக 11 பள்ளிகள், 2 கல்லூரிகள், ஒரு பல்கலைக்கழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் 98 பேர், கல்லூரி மாணவர்கள் 7 பேர், ஆசிரியர்கள் 15 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால், மாவட்டம் முழுவதும் 14 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால், பள்ளிக்கு இரண்டு வாரம் விடுமுறை அளிக்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவிட்டுள்ளார்.

”பள்ளிகளில் தொற்று பரவும் நிலையில், அலட்சியமாக செயல்பட்ட கும்பகோணத்திலுள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனியார் மேக்ஸ்வெல் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.5,000 அபராதமும் அஜாக்கிரதையாக செயல்பட்டதற்காக பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது''என மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கடிதம்

மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், ”மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால், கொரோனா பரவல் தொடர்பான விழிப்புணர்வு,முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை கட்டாயமாக பின்பற்ற மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். நோய் பரவாமல் இருக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

சனி 20 மா 2021