jRippedJeans: சர்ச்சையில் உத்தரகாண்ட் முதல்வர்!

public

‘கிழிந்த ஜீன்ஸ் அணிந்த பெண்கள் சமுதாயத்துக்கு ஒரு மோசமான முன்மாதிரி’ என்று சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியுள்ள உத்தரகாண்ட் முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பெண்கள் பதிவிட்டு வரும் #RippedJeans என்ற ஹேஷ்டேக் இப்போது டிரெண்டாகி வருகிறது

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டேராடூனில், உத்தரகாண்ட் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட உத்தரகாண்டின் முதல்வர் தீரத் சிங் ராவத் கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் பேசிய ராவத், ‘பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் (Ripped Jeans) அணிந்து முழங்கால்களை வெளிப்படுத்துவது குழந்தைகளுக்கு மோசமான எடுத்துக்காட்டு’ என்றும், இதனால் சமுதாயத்தில் ஏற்படவிருக்கும் விளைவு குறித்து தான் அச்சப்படுவதாகவும் கூறினார்.

மேலும் அவர், “முழங்கால்களைக் காண்பிப்பது, கிழிந்த டெனிம் அணிந்து பணக்காரக் குழந்தைகளைப்போல தோற்றமளிப்பது… இதெல்லாம் எங்கிருந்து தொடங்குகிறது? வீட்டிலிருந்துதானே… ஆசிரியர்கள் அல்லது பள்ளிகளின் தவறு என்ன? முழங்கால்களை காட்டும் ஜீன்ஸ் அணிந்து என் மகனை எவ்வழியில் அழைத்துச் செல்கிறேன்? பெண்களும் குறையில்லாமல் தங்களின் முழங்கால்களைக் காட்டுகிறார்கள். இது நல்லதா? மேற்கத்திய உலகம் நமது பாரம்பரியத்தைப் பின்பற்றி, மூடிமறைக்கும்போது, இந்தியர்கள் நிர்வாணத்தை நோக்கி ஓடுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இத்துடன் ஜீன்ஸ் அணிந்திருந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெண்ணைப் பற்றிய சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.

“அவர் உலகுக்கு அந்தக் கிழிந்த ஜீன்ஸின் மூலம் என்ன செய்தியைக் கூற வருகிறார்? தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தும் ஒரு பெண் சமூகத்தில் பலவிதமான மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வெளியே செல்பவர். இந்த உடையின் மூலம் சமூகத்துக்கும் குழந்தைளுக்கும் என்ன மாதிரி முன்னுதாரணமாக அவர் இருப்பார்? இது எல்லாம் வீட்டிலேயேதான் தொடங்குகிறது. வீட்டில் பெற்றோர்கள் எவ்வாறு இருக்கிறார்களோ பிள்ளைகளும் அவ்வாறே இருப்பார்கள். வீட்டில் சரியான கலாச்சாரம் கற்பிக்கப்படும் ஒரு குழந்தை, எத்துணை நவீனமான வளர்ந்தாலும், வாழ்க்கையில் ஒருபோதும் தோல்வியடையாது” என முதல்வர் தீரத் சிங் ராவத் பேசியிருப்பது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பெண்கள் #RippedJeans என்ற ஹேஷ்டேக் மூலம், ‘எங்கள் ஆடையைக் கொண்டு எங்களை ஜட்ஜ் செய்யாதீர்கள்’ என்று பதிவிட்டு வருகிறார்கள். தாங்கள் ரிப்டு ஜீன்ஸ் அணிந்த புகைப்படங்களையும் பதிவேற்றி வருகிறார்கள். எனவே, #RippedJeans இப்போது டிரெண்டிங்கில் உள்ளது.

உடைகள் அணிவது அவரவரின் விருப்பம். அதை வைத்து எப்படி ஒருவரை தீர்மானிக்க முடியும்? பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு அவள் ஆடைகளையே காரணமாகச் சொல்வது எப்போது முடிவுக்கு வரும்? ஒரு மாநிலத்தை ஆளும் முதல்வரே இப்படிப் பெண்களை பேசும் நாட்டில், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வார்த்தை வன்முறைகளுக்குக்கூட முடிவை நெருங்க முடியாது என்கிற கருத்துகளை முதல்வருக்கு எதிராகப் பதிவு செய்து வருகிறார்கள்.

**-ராஜ்**

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *