மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

ஏழு வங்கிகளின் காசோலை செல்லாது - கவனிக்க வேண்டியவை என்னென்ன?

ஏழு வங்கிகளின் காசோலை செல்லாது - கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வங்கிகள் இணைப்பு முறை நடைமுறைக்கு வருவதால் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, அலகாபாத் வங்கி ஆகிய ஏழு வங்கிகளின் காசோலை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதற்காகவும் வங்கிச் சேவைகளை எளிமைப்படுத்தும் நடவடிக்கையாகவும் மத்திய அரசு சிறிய பொதுத்துறை வங்கிகளைப் பெரிய வங்கிகளுடன் இணைத்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் வங்கி இணைக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது பெரிய வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. மற்றொரு பெரிய வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி ஆகிய வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு நடவடிக்கை தற்போது முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது.

சிறிய வங்கியின் வாடிக்கையாளர்களுக்குப் புதிதாக இணைக்கப்பட்ட பெரிய வங்கியின் சார்பாகப் புதிய ஏடிஎம் கார்டு, பாஸ் புக், காசோலைகள் போன்றவை வழங்கப்பட்டுவிட்டன. உதாரணத்துக்கு, விஜயா வங்கியின் வாடிக்கையாளருக்கு பேங்க் ஆஃப் பரோடா சார்பாக புதிய ஏடிஎம் கார்டு, காசோலைகள் போன்றவை வழங்கப்பட்டுவிட்டன.

என்றாலும், வாடிக்கையாளர்கள் மார்ச் 31ஆம் தேதி வரை பழைய வங்கி அவர்களுக்கு வழங்கியிருந்த காசோலைகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. வங்கி இணைப்பு முழுமையாக முடிந்துவிட்டபடியால் இனி ஏப்ரல் 1 முதல் சிறிய வங்கியின் காசோலைகள் காலாவதியாகிவிடும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி, பெரிய வங்கி சார்பாக வழங்கப்பட்ட காசோலைகள் மற்றும் பாஸ்புக் புத்தகத்தை மட்டுமே இனி பயன்படுத்த முடியும்.

அதனால் வாடிக்கையாளர்கள் புதிய காசோலைகள் மற்றும் வங்கிப் புத்தகத்தை இதுவரை பெறவில்லை என்றால், வங்கிக் கிளைகளை அணுகி உடனடியாகப் புதிய காசோலைப் புத்தகத்துக்கு விண்ணப்பம் செய்யவும். அவ்வாறு செய்யாவிட்டால் உங்கள் கணக்கில் பணம் இருந்தாலும் ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு, நீங்கள் கொடுத்த காசோலை செல்லாததாகக் கருதப்படும்.

மேலும், வாடிக்கையாளர்கள் பின்தேதியிட்ட காசோலைகளை வழங்கி இருக்கும் அனைத்துப் பரிவர்த்தனைகளிலும் இந்த மாறுதலைத் தவறாமல் செய்ய வேண்டும். உதாரணமாக, காசோலை மூலம் கடனுக்குத் தவணை செலுத்தும்பட்சத்தில் பழைய காசோலையைத் திரும்பப் பெற்று புதிய காசோலை கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதுபோன்று மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் போன்ற பலவிதத் திட்டங்களில் பின் தேதியிட்ட காசோலைகளைக் கொடுத்திருந்தால் அங்கெல்லாம் மாற்றம் செய்ய வேண்டிவரும். அதனால், வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக இந்த மாற்றங்களைச் செய்வது வங்கி சேவையில் எந்தக் குளறுபடியும் வராமல் இருப்பதற்கு உதவும்.

பெரிய வங்கியின் சார்பாக இந்த இணைப்பு சார்ந்த அனைத்து மாற்றங்களும் ஏற்கெனவே செய்யப்பட்டுவிட்டன. சிறிய வங்கியின் பெயர்ப்பலகைகள் அனைத்தும் மாற்றப்பட்டுவிட்டன. வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை மேற்கொள்ளும் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏடிஎம் மெஷின்கள், ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், காசோலைகள், வங்கிப் புத்தகங்கள் ஆகிய அனைத்தும் பெரிய வங்கியின் பெயரில் ஏற்கெனவே மாற்றப்பட்டுவிட்டன.

வங்கிகளின் இந்த மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் கடந்த இரண்டு (மார்ச் 15, 16) நாட்களாக வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

புதன் 17 மா 2021