மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

கொரோனா தடுப்பூசி: தயக்கம் காட்டாதீர்கள்!

கொரோனா தடுப்பூசி: தயக்கம் காட்டாதீர்கள்!

கொரோனா தடுப்பூசி.... இன்றைய சூழலில் நமக்கு மிக மிகத் தேவையான ஒன்று. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காத வரை.... எப்போது தடுப்பூசி கண்டுபிடிப்பார்கள்.... தடுப்பூசி பயன்பாடு வந்தால் தான் கொரோனவைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறி வந்தவர்கள், இன்று அதைப் போட்டுக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர்.

காரணம் தடுப்பூசி மீதான ஏராளமான குழப்பம்? மது அருந்துபவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாதா?, கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டில் எதை போட்டுக்கொள்வது? தடுப்பூசி போட்டால் பக்க விளைவுகள் வருமா? ஒரே தடுப்பூசியைத்தான் போட்டுக்கொள்ள வேண்டுமா? என எக்கச்சக்கமான கேள்விகள் மக்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏன், கொரோனா குறித்து நன்கறிந்த முன் களபணியாயளர்களே தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன் வருவதில்லை என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தடுப்பூசியின் அவசியம், அதை ஏன் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை, உதவி திட்ட மேலாளர் மருத்துவர் ஜெயப்பிரியா.

காவல்துறையினர் மத்தியில் பேசிய ஜெயப்பிரியா, “தடுப்பூசி போட்டால் ஆல்கஹால் குடிக்கலாமா என்றுதான் கேட்கிறார்கள். தடுப்பூசியும் ஆல்கஹாலும் நேர் எதிரானது இல்லை. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டு 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை மது குடிப்பதை நிறுத்த வேண்டும்.

கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் போது வேறு மருந்தை (உதாரணமாக நாய்க்கடிக்கு ஊசி போன்ற வேறு மருந்துகள் ) போட்டுக்கொள்ளலாமா என்று கேட்கிறார்கள். எந்த ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், 14 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை இடைவெளி வேண்டும்.

நாம் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளைப் பயன்படுத்துகிறோம். எனவே முதல் டோஸ் கோவிஷீல்டு போட்டுக்கொண்டால், இரண்டாவது டோஸும் கோவிஷீல்டுதான் போட்டுக்கொள்ள வேண்டும். முதல் டோஸ் கோவாக்சின் எடுத்துக்கொண்டால் இரண்டாவது டோஸும் கோவாக்சின் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போடும் மையங்களில், ஊசி போட்டுக்கொண்ட பிறகு, கோவின் ஆப்பில் பதிவு செய்து ஒரு சான்றிதழைப் பதிவு செய்து கொடுப்பார்கள். 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ளச் செல்லும் போது, இந்த சான்றிதழைக் காட்டி முதலில் போடப்பட்ட மருந்தையே செலுத்திக்கொள்ளலாம். காவலர்கள் பணி நிமித்தமாக வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் போது இந்த சான்றிதழைக் காண்பித்து முதலில் என்ன மருந்து போட்டுக்கொண்டீர்களோ அதையே போட்டுக்கொள்ளலாம்.

இரண்டாவது டோஸும் போட்டுக்கொண்ட பிறகு இறுதியாக ஒரு சான்றிதழைக் கொடுப்பார்கள், அதை விமானத்தில் செல்லும்போதோ, அல்லது தேவைபடும் இடங்களிலோ காண்பிக்கலாம்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவருக்கும் காய்ச்சல் வருவதில்லை. 20 அல்லது 30 சதவிகித பேருக்குக் காய்ச்சல் வருகிறது. இவ்வாறு ஏற்படுவதன் மூலம் உடலில் மருந்து நன்றாகவே வேலை செய்கிறது என்று அர்த்தம்” என்று கூறினார்.

இதற்கு உதாரணம் கூறிய அவர், “எதிரி நாட்டு பகைவன், நமது நாட்டுக்குள் வரும் போது முதலில் இராணுவ வீரர்கள் தான் போய் நிற்பார்கள். அதுபோன்று தான் கண்ணுக்குத் தெரியாத எதிரியை (கொரோனா) அழிக்க நாம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

இங்கு கொரோனாவின் முதல் அலை ஓய்ந்தது போலத்தான் இருக்கிறது. ஒருவேளை பிரிட்டனில் வந்தது போல் இரண்டாம் அலை ஏற்படுகிறது என்றால், அதற்கு முன்களப் பணியாளர்களாகிய நாம் எதிர்ப்புச் சக்தியோடு பாதுகாப்பாக இருக்க வேண்டும். நம் குடும்பத்தில் கொரோனாவால் ஏற்படக் கூடிய இறப்பு என்பது மிகப்பெரிய இழப்பு. எனவே, இறப்பைத் தவிர்க்கவும், சீரியஸ் நிலை வருவதற்கு முன்னதாகவும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். எனவே தயக்கம் இன்றி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

-பிரியா

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

புதன் 17 மா 2021