மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

ஊரடங்கு வதந்தியை நம்ப வேண்டாம்!

ஊரடங்கு வதந்தியை நம்ப வேண்டாம்!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வரும் என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று(மார்ச் 17) தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் கூட்டங்களாலும், திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளாலும்தான் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

மக்கள் கூட்டமாக கூடுகின்ற இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பது கவலையளிக்கிறது. அபராதம் விதித்தால் மட்டுமே மக்கள் முகக்கவசம் அணிகின்றனர். அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களை முகக்கவசம் அணியுமாறு கட்சியினர் வலியுறுத்த வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே கூட்டங்கள் நடத்த வேண்டும்.

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 19 மாநிலங்களில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாகவும், சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூரில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாகவும் உள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இலவசமாக போடப்படும் தடுப்பூசிகளை கண்டிப்பாக அனைவரும் போட வேண்டும். தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதத்தை போலவே இந்தாண்டும் மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால், மக்கள் அலட்சியமாக இல்லாமல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் முதலில் பரவிய கொரோனா நோயே தற்போதும் பரவுகிறது. வேறு வடிவத்தில் உருமாறிய கொரோனா தமிழகத்தில் இல்லை.

கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதால், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் போன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், நேற்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பல்வேறு விதமான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். மேலும், இன்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சுகாதார அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கொரோனா தடுப்புப்பணிக்காக. பீகார் மாநில சுகாதார அதிகாரிகள் சுதிர்குமார், ரோகிணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பீகாரில் கொரோனாவுக்கு மத்தியில் தேர்தல் நடத்தியது எவ்வாறு என்று அம்மாநில அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

புதன் 17 மா 2021