மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

மத்திய பட்ஜெட் 2021-22 ஓர் பருந்துப் பார்வை!

மத்திய பட்ஜெட் 2021-22 ஓர் பருந்துப் பார்வை!

பேரா.நா.மணி

"2021-22 பட்ஜெட், வரலாறு படைக்கப் போகிறது. கடந்த நூற்றாண்டுகள் கண்டிராத பட்ஜெட்டாக இருக்கப் போகிறது" என கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அவர் கூறியது போல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது தான் இந்த ஆண்டிற்கான பட்ஜெட். அசாதாரண சூழ்நிலையை கையாள அசாதாரண கொள்கை முடிவுகள் தேவைப் படுகிறது. இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில், இரு முக்கியமான சவால்கள் அவருக்கு இருந்தது. ஒன்று நாமெல்லோரும் நன்கு அறிந்த கோவிட் - 19 பெருந் தொற்று கால இழப்புகள்.

கோவிட் 19 பாதிப்புகள்

கோவிட் - 19 தொடங்கிய ஆறு மாத காலத்திலேயே இந்தியப் பொருளாதாரம் 15 விழுக்காடு சுருங்கியது.தனியார் துறை மூலதனம் சுருங்கிக் கொண்டே வந்தது. சாமானிய உழைக்கும் மக்கள் தங்கள் வேலைகளையும் வருவாயையும் இழந்தனர். ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகரித்தது. தாங்கமுடியாத வலி நிறைந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவலங்களை கண்டோம். கல்வி மற்றும் சுகாதாரம் வாய்ப்புகள் முற்றிலும் முடங்கியது. இத்தகைய துயரங்கள் அதிகரிப்பின் விளைவாக மக்களின் ஏற்றத் தாழ்வின் பரிமாணங்களும் அதிகரித்தது. இதனை சரி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அல்லது சவால் அரசுக்கு ஏற்பட்டது.

கோவிட் 19க்கு முந்தைய பொருளாதார தேக்கம்

கோவிட் - 19 பெருந் தொற்று பேரிழப்புகளுக்கு முன்பாகவே இந்தியப் பொருளாதார வளர்ச்சி, பெரு வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டு இருந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.1 விழுக்காட்டிலிருந்து 3.1 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்தது. நாட்டின் மொத்த மூலதன ஆக்கம், 39.1 விழுக்காட்டிலிருந்து 32.2 விழுக்காடு (2011-12ல் இருந்து 2018-19) வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டு இருந்தது. இதே காலகட்டத்தில், கார்ப்பரேட் முதலீடுகள் கூட 13.5 விழுக்காட்டில் இருந்து 11.9 விழுக்காடாக வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டு இருந்தது. தனியார் வங்கிகள் பொதுத் துறை வங்கிகள் என எல்லா வகை வங்கிகளிலும் வராக் கடன் அளவு அபாய அளவுக்கு மேல் அதிகரித்து இருந்தது. வேலையின்மை கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்புகள் குறைந்து இருந்தது. நகர்புற மற்றும் கிராமப் புற கூலி விகிதங்களும் குறைந்துவிட்டிருந்தது.

இருமுக சவால்கள்

இந்த இருமுக சவால்கள் சுதந்திரத்திற்கு பிறகு நாடு சந்திக்காத நெருக்கடிகள். அவற்றை எதிர்கொள்ள போடப்படும் பட்ஜெட் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது தான். சந்தேகமில்லை. அப்படிப் போடப் பட்ட பட்ஜெட் அந்த இருமுக சவால்களை சந்திக்கத் தக்கதாக இருந்ததா? என்பதை இந்தக் கருத்துரையில் சுருக்கமாக ஆராய்வோம்.

வரம்பற்ற செலவுகளை செய்யலாமா?

இத்தகைய சிக்கலான காலகட்டத்தில் அரசுக்கு நிதிச் சுமை கூடும். பொதுவான நிதிப் பற்றாக்குறை வனப்பான 3.5 விழுக்காட்டிற்கு மேல் அரசு தனது செலவினங்களை உயர்த்த வேண்டி இருக்கும். அப்படி உயர்த்த ஏதேனும் தடைகள் இருக்கிறதா என்பதையும் பட்ஜெட்டுக்கு முன்பு அரசு தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை ஆய்வு செய்தது. "இந்தியாவின் கடன் மதிப்பு G20 எனப்படும் பெரும்பாலான வளரும் நாடுகளின் கடன் நிலையைக் காட்டிலும் குறைவாகவே இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் வட்டி விகிதங்கள் குறைவாகவே இருக்கிறது. இது பற்றிய தர நிர்ணய அமைப்புகளின் கருத்துக்கள் குறித்து கவலைப் பட தேவையில்லை. கடன் வாங்கும் சக்தியும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும் சக்தியும் இருந்தால் போதும்" எனவே அந்தத் தகுதிகள் நம் நாட்டிற்கு நிறையவே இருக்கிறது. எனவே நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு தேவையான செலவுகளை நிதிப் பற்றாக்குறை அளவுக்கு மேல் செய்யலாம் என்றது.

பட்ஜெட் என்ன செய்திருக்க வேண்டும்?

எனவே மத்திய அரசின் பட்ஜெட், கோவிட் - 19 ஆல் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பினை மதிப்பீடு செய்யும். வருவாய் இழப்புகளை கணக்கிடும். தேவைப் படும் செலவினங்களை கணிக்கும். பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை கட்டுப் படுத்தும். பொருளாதாரத்தை மீட்சிக்கு கொண்டு வரும். ஒட்டு மொத்தமாக, இந்தியப் பொருளாதாரத்தை கோவிட் - 19 பெருந் தொற்றுக்கு முந்தைய நிலைக்கும் கொண்டு வருவதோடு, அதற்கு முன்பு நிலவி வந்த பொருளாதார தேக்கத்தில் இருந்து மீட்டெடுக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.

எதிர்பார்த்த விளைவுகளை பட்ஜெட் ஏன் தரவில்லை?

2021-22 பட்ஜெட் இந்த எதிர்பார்ப்பை நோக்கி நகராமல் போனதற்கு சில அடிப்படை காரணங்கள் உள்ளன. பட்ஜெட் என்பது வரவிருக்கும் ஆண்டிற்கான வரவு செலவு மதிப்பீடுகள் மட்டுமல்ல. கடந்த ஆண்டில் செய்த பட்ஜெட் செலவினங்களின் மதிப்பீடு ஆகும். இந்தப் பார்வை கடந்த சில வருடங்களாகவே அரசுக்கு குறைந்து வருகிறது. இதனால் நடப்பு பட்ஜெட்டின் நம்பகத் தன்மையும் குறைந்து வருகிறது. ஓராண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் மிக முக்கியமான தேவைகள் கருதியோ, எதிர்பாராத செலவுகளை செய்ய நேர்ந்தால் மட்டுமே மாறுதல்கள் செய்வது என்ற நிலை மாறி, ஆட்சியாளர்களின் அரசியல் காரணங்களுக்காக பட்ஜெட்டிற்கு முன்பும் பின்பும் பெரும் மாறுதல்கள் செய்யப்படுகிறது. சில நேரங்களில் மினி பட்ஜெட் போன்ற அறிவிப்புகள் வருகிறது. இதனால் பட்ஜெட் மீதான பகுப்பாய்வு என்பது பயன் குன்றிப் போகிறது. இறுதியாக கணக்கிட்டுப் பார்த்தால் பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கும் உண்மை நிலைக்கும் பெருத்த வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. இதனால் பட்ஜெட்டின் புனிதத் தன்மை கெட்டுவிடுகிறது.

உணவு மானியத்தை உயர்த்திக் காட்டுவது எது?

இதற்கு உதாரணமாக ஒன்றைக் கூறலாம். உணவு மானியத்திற்காக 2016-17 ல் 3. 25 இலட்சம் கோடி தேசிய சிறுசேமிப்பு நிதியில் இருந்து கடன் பெறப்படுகிறது. இதற்கான வட்டியும் கூடிக் கொண்டே செல்கிறது. இதனால் உணவு மானியத்தின் அளவும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் ஒரு பகுதியை, இந்த பட்ஜெட்டில் கொடுத்துத் தீர்க்க முடிவெடுக்கிறார் நிதி அமைச்சர். இந்த ஆண்டில் 1.35 இலட்சம் கோடியும், அடுத்த ஆண்டு 55 000 கோடியும் கொடுத்து விட முடிவு செய்கிறார். இந்த ஆண்டிற்கான உணவுக்கான மானியத்தில் 1.35 இலட்சம் கோடி சேரும் போது அது பெருந்தொகையாகத் தெரிகிறது. உண்மையில் இந்தத் தொகை இந்த ஆண்டின் உணவு மானியத்திற்கு செலவிடப் பட வில்லை என்பதே யதார்த்தம். வரவு செலவு திட்ட அறிக்கை தயார் செய்த பின்னர் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், ஒன்று நிதிப் பற்றாக்குறையை குறைத்துக் காட்டுகிறது அல்லது ஒதுக்கீட்டை உயர்த்திக் காட்டுகிறது அல்லது இரண்டுமே.

பட்ஜெட்டின் மரபுகள் மீறல்

அதேபோல், வரவு செலவு திட்ட அறிக்கை தயாரிப்பு மரபுகளும் தொடர்ந்து மீறப்படுகிறது. இதனாலும் மிகை மதிப்புக் கணக்குகள், மிக அதிக ஒதுக்கீடுகள் போன்ற காட்சிப் பிழை தோற்றங்களையும் உருவாக்குகிறது. இந்த பட்ஜெட்டில் இதற்கு மிகச் சிறந்த உதாரணம், இந்த பட்ஜெட் ஒரு சுகாதார பட்ஜெட். கோவிட் - 19 பெருந் தொற்று காலத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட பட்ஜெட். கடந்த ஆண்டைக் காட்டிலும் 137 விழுக்காடு சுகாதாரத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பிம்பத்தை இது தருகிறது. ஒரு முறை செய்யும் செலவுகளையும் நிதிக் குழு ஒதுக்கீட்டையும் பட்ஜெட் ஒதுக்கீட்டில் சேர்க்கக் கூடாது என்று மரபு பின்பற்றப் பட்டு வந்தது. ஆனால் இந்த பட்ஜெட்டில் அந்த மரபு மீறப்பட்டு, கோவிட் 19 பெருந் தொற்றுக்கான தடுப்பூசி மருந்துக்காக ஒதுக்கப்பட்ட 35 000 கோடி, குடிநீர் மற்றும் பொது சுகாதாரத் துறைக்கான முதலீடு 60000 கோடி, நிதிக் குழு ஒதுக்கீடு 49 200 கோடி ஆகியவை 1,44,200 கோடி ஆகியவை ஒரு முறை செய்யப் படும் செலவுகள். இவையாவும் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த ஒதுக்கீடாக கருதப்படக் கூடாது. ஆனால் இவை சகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடாக அரசு கணக்கிட்டுக் கொண்டதால் சுகாதாரச் செலவுகள் 137 விழுக்காடு கடந்த ஆண்டைக் காட்டிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கியது. இந்த பட்ஜெட்டை சுகாதாரம் சார்ந்த பட்ஜெட் என்று பேசத் தொடங்கினர். " இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற சரியான பணி தான் என்று பேசப்பட்டது" ஆனால் உண்மையில் சுகாதாரத் துறைக்கு‌ இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு ஒதுக்கியது வெறும் 74 ,602 கோடி மட்டுமே. இந்தத் தொகை, கடந்த பட்ஜெட்டில் (2020-21) சுகாதாரத் துறைக்கு‌ ஒதுக்கீடு செய்த 82,445 கோடியைக் காட்டிலும் குறைவான தொகையே. ஒரு சாதாரண ஆண்டைக் காட்டிலும் நூற்றாண்டு காணாத பெருந் தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய ஏற்கனவே ஒதுக்கீடு செய்ததைக் காட்டிலும் குறைவாகவே அரசு ஒதுக்கீடு செய்தது என்பது அதிர்ச்சிகரமான உண்மை.

மினி பட்ஜெட்கள்

கோவிட் - 19 பெருந் தொற்றுக்கான நிவாரணம் என்ற பெயரில் மினி பட்ஜெட்டுகள் போல மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தொகை மொத்தம் 27.1 இலட்சம் கோடி. ஆனால் இந்தத் தொகை கடந்த ஆண்டிற்கான மறுமதிப்பீட்டு செலவினங்களில் எங்கும் காணப் படவில்லை. கடந்த ‌பட்ஜெட்டை காட்டிலும் 4 இலட்சம் கோடி மட்டுமே ‌கூடுதலாக செலவிடப் பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

தொடர்பற்றதை தொடர்பு படுத்துதல்

விவசாயிகள் போராட்டத்தை ஒட்டி,நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட ஒரு புள்ளிவிவரம் நடப்பு பட்ஜெட்டில் கூறப்பட்டது அல்ல. என்றாலும், அதுவும் இங்கு பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளத் தக்கது. 2020-21 ஆம் ஆண்டில் கோதுமைக்கு 75 ,060 கோடியும் நெல்லுக்கு 1, 72 ,752 கோடியை குறைந்த பட்ச ஆதரவு விலைக்காக அரசு செலவிட்டுள்ளது என்று கூறியுள்ளார். உண்மையில் குறைந்த ஆதரவு விலைக்காக அரசு செய்யும் செலவுகள் முற்றிலும் விவசாயிகளுக்கு செய்யும் செலவுகள் அல்ல. தேசிய உணவு உத்திரவாத சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் பொது விநியோக முறையை பலப்படுத்தவும் சேர்த்து செய்யப்படும் செலவுகள். அந்த பட்ஜெட் செலவுகளின் உள்ளடக்கம். ஆனால் தனியாக விவசாயிகளுக்கு அல்லது விவசாயத் துறைக்கு செலவு செய்வது போன்ற தோற்றத்தை இந்த அறிவிப்பு உருவாக்குகிறது.

பெண்கள், குழந்தைகள் மற்றும்ஊட்டச்சத்து நிதி குறைப்பு

கோவிட் 19 பெருந் தொற்றுக்காலத்தில் பெருமளவில் பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வருவாயும் ஊட்டச்சத்து நிலைகளும் முந்தைய காலத்தைக் காட்டிலும் குறைந்திருக்கிறது. இதற்காகவும் பட்ஜெட் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக இந்தத் துறைக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மதிய உணவுத் திட்டம். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், கர்ப்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கான திட்டங்கள் நடப்பு பட்ஜெட்டில் ஒருங்கிணைப்பு செய்யப் பட்டது. அவற்றிற்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில் கடந்த பட்ஜெட்டின் ஒதுக்கீட்டோடு ஒப்பிடும்போது 25 விழுக்காடு குறைந்துள்ளது.

வேளாண்மைக்கான ஒதுக்கீடு

2020-21 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 1,34 ,400 கோடி வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் வருடம் முடிந்து கணக்குப் பார்க்கும் போது 1,16 ,758 கோடி தான் செலவாகி இருக்கிறது என்று பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது. இந்த வருடத்திற்கான வேளாண்மைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 1,23, 018 கோடி. இதில் எவ்வளவு தொகை செலவு செய்யப்பட இருக்கிறதோ தெரியவில்லை. மத்திய அரசின் பல வேளாண்மை சார்ந்த திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் வேளாண்மை சார்ந்த மத்திய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 5,000 கோடி செலவிடப்பட வில்லை.

கிராமப் புற நெருக்கடிகளுக்கு ஏன் தீர்வு கிட்டவில்லை

கிராமப் புற பொருளாதார நெருக்கடிகளை தீர்க்கவும் ,புலம் பெயர்ந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பி அங்கேயே ஏதேனும் தொழில் செய்து பிழைத்து கொள்வோம் என்று நினைப்போருக்கும் அரசிடம் என்ன திட்டம் உள்ளது? என்ன திட்டத்தை முன் வைத்தது? என்ற கேள்விக்கு காத்திரமான பதில் அரசிடம் இல்லை. கிராமப் புற உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் , வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டம் என பரவலாக அறியப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகளை உருவாக்க மாநில அரசுகள் கூடுதல் நிதியைக் கேட்டு வருகின்றன. வேலை நாட்களை அதிகரிக்கவும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு இதற்கென ஒதுக்கீடு செய்துள்ள தொகை, 2019-20 ஆண்டு ஒதுக்கீடு செய்த தொகையைக் ( 71 ,687 கோடி) காட்டிலும் சற்று கூடுதலாக ஒதுக்கீடு (73,000 கோடி ) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகைக் காட்டிலும் ஒவ்வொரு கிராமப் புற வளர்ச்சித் திட்டத்திற்கும் குறைவாகவே செலவிடப் பட்டுள்ளது. இந்த ஆண்டும் அதே நிலை தொடரும் என்றே பலரும் மதிப்பீடு செய்கின்றனர்.

வரலாற்று வாய்ப்பை நழுவ விட்ட பட்ஜெட்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது போல இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டாக இருந்திருக்க வேண்டும். நாடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இருமுக சவால்களான பொருளாதார பின்னடைவு மற்றும் கோவிட் 19 பெருந் தொற்று பாதிப்பு என இரண்டில் இருந்தும் மீட்டெடுத்து கொண்டு வரும் எந்த முயற்சியும் இல்லாத வழக்கமான வரவுசெலவு திட்ட அறிக்கையாக முடிந்துவிட்டது.

குறிப்பு: 13.03.2021 அன்று திருச்சி ஜமால் முகமது கல்லூரி, பொருளாதாரத் துறையின் இணைய வழிக் கருத்தரங்க உரையின் சுருக்கமான தமிழ் வடிவம்.

கட்டுரையாளர் குறிப்பு

பேராசிரியர் நா. மணி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர். ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளாதாரத் துறைத் தலைவர் . தொடர்பு மின்னஞ்சல்: [email protected]

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

புதன் 17 மா 2021