முழுமையாக ரயில்களை இயக்க அனுமதி இல்லை!

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தொடர்ந்திருந்தார். அதில், ” கொரோனா ஊரடங்குக்கு பிறகு, தற்போது 65 சதவிகித ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், அனைத்து ரயில்களும் எப்போது இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கவில்லை
திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து, குளிர்சாதான பேருந்துகள் 100 சதவிகிதம் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவில் பயன்படுத்தக் கூடிய போக்குவரத்தான ரயில்கள் மட்டும் முழுமையாக இயக்கப்படவில்லை.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி முழுமையாக ரயில்களை இயக்கக் கோரி ரயில்வே துறையிடம் மனு அளித்தேன். அந்த மனுவை ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்கவில்லை. அதனால், அனைத்து ரயில்கள், புறநகர் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று(மார்ச் 16) தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் அனைத்து ரயில்களை இயக்க உத்தரவிட முடியாது என கூறினர். மேலும், புறநகர் ரயில்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற முடியாது, மக்கள் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க முடியாது.
இதுதொடர்பாக, நிபுணர்களை கலந்தாலோசித்து ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துக் கொள்ளலாம். தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்த பிறகு அல்லது தொற்று பரவல் குறைந்தாலோ மனுதாரர் இதே கோரிக்கையை நீதிமன்றத்தில் எழுப்பலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
வினிதா