மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

இந்து பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்த இஸ்லாமியர்!

இந்து பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்த இஸ்லாமியர்!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் இஸ்லாமியர் ஒருவர் தன் கடையில் வேலை பார்த்த இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை மகளாக வளர்த்து வந்ததுடன், தன் சொந்த செலவில் நகை, சீர்வரிசை பொருட்கள் வாங்கிக் கொடுத்து அம்மன் கோயில் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரத்தநாடு கடைத்தெருவில் ஹாஜீ ஷுமார்ட் என்ற பெயரில் 32 வருடங்களுக்கு மேலாக செருப்புக் கடை நடத்தி வருபவர் ராஜா முஹம்மது. இவருடைய கடையில் பிரியங்கா என்ற பெண் வேலை பார்த்து வந்துள்ளார். அப்பா இறந்து விட பிரியங்காவின் அம்மாவும் அவரை கவனிக்க தவறிவிட்டார். இதையடுத்து கடையில் வேலை பார்த்துவந்த பிரியங்காவைச் சொந்த மகளாக பாவித்து பாதுகாப்பாக கவனித்து வந்தார் ராஜா முஹம்மது.

இந்த நிலையில் பிரியங்காவுக்கு மாப்பிள்ளை பார்த்து அவரின் சொந்தங்களின் அனுமதியுடன் தங்க நகை, கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட சீர் வரிசை பொருள்கள் சீதனமாக கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளார். இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவரான ராஜா முஹம்மது இந்து பெண்ணான பிரியங்கா - விஜயகுமார் திருமணத்தை ஒரத்த நாட்டில் உள்ள விசாலாட்சி அம்மன் கோயிலில் தன் குடும்பத்தினருடன் சென்று தலைமை வகித்து இந்து முறைப்படியே திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ராஜா முஹம்மது, “கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக பிரியங்கா என்னோட கடையில் வேலை பார்த்து வருகிறார். ரொம்ப தங்மான பொண்ணு. தன் சம்பாத்தியத்துல வந்த வருமானத்துல தன்னோட அக்கா ரெண்டு பேருக்கும் பிரியங்கா கல்யாணம் செஞ்சு வெச்சா. திடீரென அவர் அப்பா இறந்ததுக்கு இறுதி சடங்கிற்கான செலவு எல்லாத்தையும் பார்த்துக்கிட்டா. சொல்லப்போனா தன் குடும்பத்தையே பிரியங்கா தூக்கி சுமந்தாள்னு சொன்னா சரியா இருக்கும்.

அப்படிப்பட்ட மனசு கொண்ட பிரியாங்காவை அப்பாவுக்குப் பிறகு கவனிக்க ஆள் இல்லை. ஒரு அண்ணனா, அப்பாவா இருந்து எங்க குடும்பத்துல ஒருத்தரா நெனச்சு நாங்க அரவணைத்து வளர்த்து வந்தோம். கூடப் பொறந்த அண்ணன் இருந்தாகூட இப்படி எல்லா கஷ்டத்துலயும் கூடவே நின்னிருக்க மாட்டாங்க என அடிக்கடி பிரியங்கா தன் அன்பினை வெளிப்படுத்துவார்.

‘உனக்கு மாப்பிள்ளை பார்த்து நான்தான் திருமணம் செஞ்சு வைப்பேன்’ என அடிக்கடி கூறுவேன். ‘உங்களை விட்டா எனக்கு வேறு யார் இருக்கா’ என பிரியங்கா சொல்லும். இந்த நிலையில ஒரு நல்ல வரன் வந்தது. மாப்பிள்ளையும் நல்ல பையனா இருந்தார். உடனே திருமணத்துக்கு ஏற்பாடு செய்துட்டேன். இதற்கு பிரியங்கா நல்லா இருக்கணும் என நெனச்ச அவங்க சொந்தகாரங்ககிட்டேயும் முறைப்படி அனுமதி வாங்கினேன்.

அழைப்பிதழ் அச்சடிக்காமல் எல்லோருக்கும் வாய் மொழியாகவே அழைப்பு கொடுத்தேன். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த எங்க சொந்தங்களைச் சேர்ந்த 30 குடும்பங்களையும் திருமணத்துக்கு அழைச்சேன். இரண்டு பவுன் நகை, கட்டில், மெத்தை, சீர் வரிசை பொருட்கள் சீதனமாக வாங்கி கொடுத்து சிம்பிள் அண்டு சூப்பராக திருமணம் நடந்துச்சு” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள பிரியங்கா, ``கடைக்கு வேலைக்கு போன என்னை ஒரு ஊழியரா பார்க்காம உசுரா பார்த்துக்கிட்டதோட, எனக்கு கல்யாணமும் செஞ்சு அழகு பார்த்தாங்க. இன்னிக்கு இல்ல என்னிக்கும் இத மறக்க மாட்டேன்” என்கிறார் கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடி.

இந்த நிகழ்ச்சி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் மத நல்லிணக்கத்துக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 16 மா 2021