மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

இன்றும் நாளையும் வங்கிகள் செயல்படாது: திமுக, விசிக ஆதரவு

இன்றும் நாளையும் வங்கிகள் செயல்படாது: திமுக, விசிக ஆதரவு

தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாளையும் (மார்ச் 15, 16) திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலினும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் கூறியுள்ளனர்.

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து, நாடு தழுவிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

மார்ச் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் கலந்துகொள்வார்கள் என வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஜி.வி.மணிமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை வங்கி வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். எனவே தெருமுனை கூட்டங்கள், வாடிக்கையாளர் சந்திப்புகள், ஆர்ப்பாட்டங்கள், கறுப்புப்பட்டை அணிதல், எதிர்ப்பு முகக்கவசம், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், பதாகைகள் என பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் தீவிர முயற்சியில் 68,000 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுத் துறைகளின் பணப்பரிவர்த்தனை, வரி வசூல், ஓய்வூதியம் வழங்குதல் போன்ற

பணிகளைப் பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாட்டில் இருந்து தனியார் வங்கிகளுக்கு மாற்றக்கூடிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் ஜன்தன் திட்டம் முதல் கல்விக்கடன், விவசாயக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பலவும் பொதுத்துறை வங்கிகளால்தான் நடைபெறுகின்றன.

அத்தகைய பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கி, கார்ப்பரேட் நலன் காக்கும் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகளுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதை எதிர்த்து மார்ச் 15, 16 தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு திமுக ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் பாஜக அரசின் கொள்கைக்கு எதிராக வங்கி ஊழியர்கள் நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முழுமையாக ஆதரிக்கிறோம். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் போக்கைக் கைவிட வேண்டும் என மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறோம்.

பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாக்கும் நோக்கோடு எதிர்வரும் 15, 16 ஆகிய இரு தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர் அமைப்புகள் அறிவிப்பு செய்துள்ளன. இந்தப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

திங்கள் 15 மா 2021