மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

தபால் வாக்கு கட்டாயமல்ல: தலைமை தேர்தல் அதிகாரி!

தபால் வாக்கு கட்டாயமல்ல: தலைமை தேர்தல் அதிகாரி!

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றுள்ளவர்கள் விருப்பத்தின் பேரிலே தபால் வாக்கு அளிக்கலாம் என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நேற்று (மார்ச் 14) வெளியிட்ட அறிக்கையில், “2021ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் கொரோனா தொற்று உள்ளவர்கள் அல்லது நோய்த் தொற்று இருக்கலாம் என சந்தேகத்தில் இருக்கும் வாக்காளர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள தபால் வாக்கு முறை கட்டாயமானதல்ல. அவர்கள் விரும்பினால் தபால் வாக்கு செலுத்தலாம்.

தேர்தல் நடத்தும் அலுவலரால் தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மேலே குறிப்பிட்ட மூன்று வகையான வாக்காளர்கள் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு கோரும் விண்ணப்பங்கள் (படிவம் 12டி) வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவம் 12டியுடன் மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான சான்று மற்றும் கொரோனா தொற்றுக்கான சான்று ஆவணங்கள் முறையே சம்பந்தப்பட்ட வாக்காளர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் முறையாக இருந்தால், அந்த விண்ணப்பங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரால் பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பப் படிவத்தில் அளிக்கப்பட்ட தகவல்களும், வாக்காளர் பட்டியலில் இருக்கும் தகவல்களும் முறையாக இருந்தால், அந்த வாக்காளர்களுக்குத் தபால் வாக்கு அளிக்கப்படும். தபால் வாக்குகளைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் 12டியில் அளித்துள்ள முகவரிக்கு வாக்குப் பதிவு செய்யும் அதிகாரிகள் குழு செல்வதற்கு முன்பு, செல்லவிருக்கும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களை தொலைபேசி மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ வாக்காளர்களுக்கு அதிகாரிகள் தெரிவிப்பார்கள்.

தபால் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு, வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு செய்யும் வழிமுறைகளை விளக்குவார்கள். வாக்காளர்களால் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டு, கையொப்பமிட்டு, அதிகாரியால் சான்று அளிக்கப்பட்ட உறுதியளிக்கும் படிவமான 13ஏ படிவத்துடன், வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குச்சீட்டை கடித உறையில் (படிவம் 13பி) வைத்து ஒட்டி, அதைப் பெரிய கடித உறையில் (படிவம் 13சி) வைத்து ஒட்டி அக்குழுவிடம் வாக்காளர்கள் ஒப்படைக்க வேண்டும்.

வாக்குப்பதிவு அதிகாரிகள் வாக்காளர்களின் இல்லங்களுக்குச் செல்லும்போது போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் மற்றும் ஒரு நுண் பார்வையாளரும் உடன் வருவார். தபால் வாக்களிக்கும் நிகழ்வு முழுவதும் காணொலியாகப் பதிவு செய்யப்பட வேண்டு்ம். வாக்குப்பதிவு செய்ய வரும் குழுவின் வருகையின்போது வாக்காளர் வீட்டில் இல்லையென்றால், மீண்டும் ஒருமுறை மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும்.

மேலே குறிப்பிட்ட மூன்று வகையான வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடியில் வாக்களிக்க அனுமதியில்லை.

வரும் 18ஆம் தேதிக்குள்ளாக தபால் வாக்குக் கோரும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து உரிய அலுவலர்களிடம் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 15 மா 2021