மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

புத்தகங்கள்- வார்த்தைகளின் வாசல்!

புத்தகங்கள்- வார்த்தைகளின் வாசல்!

மு இராமனாதன்

சென்னைப் புத்தகக் காட்சியின் 44-வது பதிப்பு பிப்ரவரி 24இல் தொடங்கி மார்ச் 9 அன்று முடிவடைந்தது. எப்போதும் பொங்கல் விடுமுறையின் போது நடக்கும். இந்த முறை கொரோனாவால் தள்ளிப் போய்விட்டது. பொதுவாக 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள். இந்த முறையும் மோசமில்லை. எட்டு இலட்சம் பார்வையாளர்கள். அதில் நானும் ஒருவன். அரங்கில் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவரது மகன் பொறியியற் கல்லூரி ஒன்றில் படிக்கிறான். 'மகனை அழைத்து வந்திருக்கலாமே' என்றேன். அவர் அளித்த பதில் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. 'அவனுக்கு ஏற்ற புத்தகங்கள் எதுவும் இங்கே இல்லையே' என்பதுதான் நண்பரின் பதில். சுமார் 800 அரங்குகளில் 15 இலட்சம் தலைப்புகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான புத்தகங்களில் ஏதொன்றும் தன் மகன் படிக்கக் கூடியதாக இல்லை என்று நினைக்கிறார் நண்பர்.

பாடப் புத்தகங்களுக்கு அப்பால்..

அதாவது படிக்கிற பிள்ளைகள் பாடப் புத்தகத்தைப் படித்தால் போதும் என்கிற மனப்பான்மை இங்கே வேர் கொண்டுவிட்டது. மாணவர்கள் பாடப் புத்தகங்களைப் பகலிரவாகப் படிக்கிறார்கள். விளையாட்டையும் தொலைக்காட்சியையும் ஒதுக்கி வைக்கிறார்கள். பெற்றோரும் உற்றோரும் இதை ஊக்குவிக்கிறார்கள். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களுக்கு இந்தப் பிள்ளைகள் போக வேண்டியதில்லை. அதிதிகளுக்கும் அது தெரியும். யாரும் குறை சொல்ல மாட்டார்கள். முகபடாம் அணிந்த குதிரைகளைப் போல் தேர்வு ஒன்றுதான் இந்தப் பிள்ளைகளின் இலக்கு. தேர்வு முடிந்ததும் பலருக்குப் படிப்பும் முடிந்துவிடுகிறது.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. மூன்றாண்டுகளுக்கு முன்னால் நடந்தது. மும்பையின் உள்கட்டமைப்புத் திட்டமொன்றில் பணியாற்றும் இரண்டு தமிழ் இளைஞர்களைச் சந்திதேன். தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியில் படித்தவர்கள். நல்வாய்ப்பாகத் தமிழை ஒரு பாடமாகப் படித்திருந்தார்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழியிலும் அவர்களால் தங்கள் கருத்துகளைச் சரளமாக வெளியிட முடியவில்லை. 'என்ன புத்தகம் படிக்கிறீர்கள்?' என்று கேட்டேன். ஒருவர் 'பொன்னியின் செல்வன்' வாங்கி வைத்திருப்பதாகவும் படிக்க நேரம் கிடைக்கவில்லை என்றும் சொன்னார். மற்றவர் சிறிது யோசனைக்குப் பிறகு ஆங்கில நாவலொன்றின் பெயரைச் சொன்னார். அதை எழுதியது ஓர் இந்தியர். நான் அந்த எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிட்டு அவரது புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டேன். தான் அந்த எழுத்தாளரைப் படித்ததில்லை என்று பதிலளித்தார்!

நம் இளைஞர்களில் பலருக்கும் வாசிப்பின் முக்கியத்துவம் தெரிவதில்லை. அது வாழ்க்கையை நேரிடுவதற்கான் வாசலாக உதவும் என்பதும் தெரிவதில்லை. இந்த இடத்தில் இரண்டு ஆளுமைகளைப் பற்றிச் சொல்வது பொருத்தமாக இருக்கும். ஒருவர் சர்ச்சில். மற்றவர் நேரு.

இரண்டு பேச்சாளர்கள்

Darkest Hour (2017) திரைப்படம் சர்ச்சில் பிரதமராக பதவியேற்கும்போது தொடங்கும். அது ஓர் இக்கட்டான காலகட்டம். நாஜிப் படைகள், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து என்று வரிசையாக வெற்றி கொள்கிறது. அடுத்த இலக்கு பிரிட்டன்தான். இந்தக் காலகட்டத்தில் சர்ச்சில் மக்களோடும் பாரளுமன்றத்தோடும் தனது உரைகள் மூலம் நெருங்கி வந்தார். தனது உரைகளை அவர் மிகுந்த பிரயாசையுடன் தயாரிப்பார். அவர் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லுவார். அவரது செயலர் தட்டச்சு செய்வார். சொல்லும்போதே சர்ச்சில் வார்த்தைகளை மாற்றுவார். தட்டச்சுப் பிரதிகளிலும் மாற்றுவார். உரையைத் தொடங்குகிறவரை திருத்திக் கொண்டிருப்பார். சர்ச்சிலுக்கு வார்த்தைகளின் மகிமை தெரிந்திருந்தது. வார்த்தைகளால் உலகத்தையே மாற்ற முடியும் என்று அவர் நம்பினார். ஜூன் 4, 1940 அன்று தனது வரலாற்றுச் சிறப்புமிக்க 'இறுதிவரை போவோம்' என்கிற உரையைப் பாராளுமன்றத்தில் நிகழ்த்தினார். 'நாம் நமது கடற்கரைகளில் போராடுவோம். நமது ஓடுதளங்களில் போராடுவோம். நமது வயல்களில், தெருக்களில், மலைகளில் போராடுவோம். ஆனால் ஒரு போதும் சரணடைய மாட்டோம்'. இந்த உரை மகத்தான எழுச்சியை உண்டாக்கியது. படத்தில் ஒரு பாத்திரம் சொல்வதாக வரும் வசனம் இது: 'சர்ச்சில் வார்த்தைகளை அடுக்கினார். அவற்றை ஒரு படையணியாக உருவாக்கிப் போர்க்களத்துக்கு அனுப்பி வைத்தார்.' சர்ச்சிலாக நடித்த கேரி ஓல்ட்மேனுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

இன்னொரு பேச்சாளர் நேரு. நாள் ஜனவரி 30, 1948. காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். பிரதமர் நேருவுக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதிர்ச்சியும் துயரமும் அவரை ஆட்கொள்கிறது. எனினும் செய்தியைத் தேசத்திற்குத் தெரிவிக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. அவர் வானொலி நிலையத்துக்குச் செல்கிறார். உரையாற்றுகிறார். "நமது வாழ்வின் ஒளி மறைந்துவிட்டது. எங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது. உங்களிடம் எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை." அவரது உணர்ச்சிகரமான உரை காந்தியடிகளின் இழப்பை நேரிடுகிற பக்குவத்தையும் மக்களுக்கு வழங்குகிறது. The Life of Gandhi (1951) நூலின் ஆசிரியர் லூயி பிஷர் சொல்கிறார்: நேரு எந்தக் குறிப்பும் இல்லாமல், எந்த ஆயத்தமும் இல்லாமல் அந்த உரையை நிகழ்த்தினார்.

இரண்டு வாசகர்கள்

நேருவும் சர்ச்சிலும் வரலாற்றின் முக்கியத் தருணங்களில் ஆற்றிய உரைகள் இவை. இந்தப் புத்தகக் காட்சியில் World's Greatest Speeches என்கிற தலைப்பில் பல ஆங்கிலப் பதிப்பகங்கள் வெளியிட்ட புத்தகங்கள் கிடைத்தன. இந்தப் புத்தகங்கள் எல்லாவற்றிலும் இந்த இரண்டு உரைகளும் இடம் பெற்றிருக்கும். ஒன்று வரி வரியாய்ச் செதுக்கி உருவாக்கப்பட்ட உரை. இன்னொன்று முன் தயாரிப்பின்றி வழங்கப்பட்ட உரை. ஆனால் இரண்டும் தேர்ந்த வார்த்தைகளால் உருவானவை. இரண்டு பிரதமர்களாலும் இதை எப்படிச் சாதிக்க முடிந்தது? முதற் காரணம் இரண்டு பேரும் எழுத்தாளர்கள். சர்ச்சில் இலக்கியத்திற்கான நோபல் விருது பெற்றவர். நேருவின் Discovery of India(1946) சிறையில் எழுதப்பட்டது. வேத காலத்திலிருந்து ஆங்கிலேய ஆட்சி வரை ஆவணப்படுத்தும் அந்த நூலை, எந்தச் சான்றுகளையும் பார்வையிடும் வசதியில்லாத சிறைக் கொட்டடியில் எழுதினார் நேரு.

வாசிப்பின் அவசியம்

இரண்டாவது காரணம்தான் முக்கியமானது. இந்தத் தலைவர்கள் சிறந்த பேச்சாளர்களாகவும் சிறந்த எழுத்தாளர்களாகவும் பரிணமிக்கவும் அதுதான் காரணம். அந்தக் காரணம் இருவரும் தேர்ந்த வாசகர்கள் என்பது. இருவரும் ஏராளமான புத்தகங்களை வாசித்தவர்கள். எண்ணற்ற வார்த்தைகள் அவர்களுக்கு வசமாகியிருந்தன. எந்த வார்த்தையை எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்தவர்கள். இருவரும் வாழ்நாள் முழுதும் வாசித்துக் கொண்டே இருந்தார்கள்.

இன்றைய இளைஞர்கள் மட்டுமில்லை, அவர்களது வழிகாட்டிகளும் வாசிப்பின் முக்கியத்துவத்தை, வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து இருக்கிறார்களா என்பதில் எனக்கு ஐயம் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னால் ஒரு ஜூம் கருத்தரங்கில் கலந்து கொண்டேன். ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அவர்களது இளம் அலுவலர்களுக்காக நடத்தியது. ஒரு மனநல மருத்துவரும் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் தலைவரும் பேசினார்கள். சக ஊழியர்களோடும் வாடிக்கையாளர்களோடும் எப்படிக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவேண்டும், எப்படித் தொடர்பு கொள்ளவேண்டும், அதன் உளவியல் கூறுகள் போன்றவற்றைப் பேசினார்கள். என் முறை வந்தது. அவர்களது ஆலோசனைகளில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் தொடர்புக்கு முக்கியமான ஒன்றை அவர்கள் விட்டுவிட்டார்கள். வார்த்தைகள். நான் அதைச் சொன்னேன். எல்லாத் தொடர்பிலும் வார்த்தைதான் முக்கியக் கண்ணி. பயன்படுத்துகிற வார்த்தை சரியான வார்த்தையாக இருக்க வேண்டும். அது நேர்ப்பேச்சாக இருக்கலாம், தொலைபேசி உரையாடலாக இருக்கலாம், மின்னஞ்சலாக இருக்கலாம், கடிதமாகவோ அறிக்கையாகவோ இருக்கலாம். எதுவாயினும் பயன்படுத்தும் சொல் சரிகணக்கான சொல்லாக இருக்கவேண்டும். பிறிதோர் சொல் அச் சொல்லை வெல்லக்கூடாது. மொழியின் சொல்வளத்தை அறிந்திருப்பதும், சரியான வார்த்தையைச் சரியான வேளையில் பயன்படுத்துவதும் கைவரப்பெற வேண்டும். அதற்குப் புத்தகங்களைவிட எளிய வழி வேறில்லை. பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்ட மாதிரித்தான் இருந்தது.

இளைஞர்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். அது எழுத்தாளர் ஆவதற்கோ பேச்சாளர் ஆவதற்கோ அல்ல. அது வாழ்க்கையை அணுகுவதற்கு. பாடங்களுக்கு அப்பால் பெரிய உலகம் இருக்கிறது. அது புத்தகங்களால் ஆனது. ஒருவர் படிக்கிற புத்தகம் கதையாக, கவிதையாக, வரலாறாக, அறிவியலாக, ஆன்மீகமாக எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். படிக்கிற பழக்கம்தான் முக்கியம். புத்தகங்கள் பல்வேறு கதவுகளைத் திறந்துவிடும். மேலும் அது எண்ணற்ற சொற்களை வாசகனின் வசமாக்கும். அது வாசகனுக்கு அவன் மேற் கொண்டிருக்கும் தொழிலில், அவனது அன்றாட வாழ்க்கையில், அவனுக்குத் தேவையான நாவன்மையையும் எழுத்து வன்மையையும் வழங்கும்.

( மு. இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: [email protected])

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

ஞாயிறு 14 மா 2021