மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 மா 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - புரொக்கோலி சமையல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - புரொக்கோலி சமையல்!

சில வருடங்களுக்கு முன்பு வரை சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டுமே கிடைத்துவந்த புரொக்கோலி இப்போது எல்லா காய்கறிக் கடைகளிலும் கிடைக்கின்றன. விளைவு, குளிரூட்டப்பட்ட கடைகளில் காஸ்ட்லியாக இருந்து வந்த புரொக்கோலி எல்லோரும் சாப்பிடுகிற காய்கறிகளின் பட்டியலில் ஒன்றாகிவிட்டது.

ருசியில் அசத்துகிற புரொக்கோலிக்கு புற்றுநோய் வராமல் தடுக்கிற இயல்பும் இருக்கிறது என்கிறது மருத்துவம். மேலும் “புரொக்கோலியில் பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் என்று எக்கச்சக்க சத்துகள் இருக்கின்றன. இதிலிருக்கிற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நம் செல்களில் சேர்கிற ‘ஃப்ரீ ரேடிக்கல்ஸ்’ எனப்படுகிற கழிவுகளை நீர்க்கச் செய்து வெளியேற்றிவிடும். அந்த வகையில் புரொக்கோலி புற்றுநோய் வராமல் தடுக்கிற உணவுகளில் ஒன்றாக இருக்கிறது” என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

“அதேநேரம் காலிஃப்ளவர் போலவே புரொக்கோலியிலும் மருந்தடித்து இருப்பார்கள் என்பதால், அதைச் சிறிது நேரம் கல் உப்பு போட்ட தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். புரொக்கோலியில் ‘மைக்ரோ ஆர்கனிசம்’ எனப்படுகிற நுண்ணுயிர்கள் இருப்பதால் கொஞ்ச நேரம் கொதிநீரில் போட்டு எடுக்க வேண்டும். அதிக நேரம் சமைத்தால், புரொக்கோலியிலிருக்கிற வைட்டமின் சி சத்து போய்விடும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்துகிறார்கள்

இப்படிப்பட்ட புரொக்கோலியை எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும், எப்படி சமைக்க வேண்டும் என்பதே பலரின் சந்தேகம். இதற்கான தீர்வு என்ன?

“காலிஃப்ளவர் அளவுக்கு புரொக்கோலியில் புழுக்கள் இருப்பதில்லை. நீரில் கைப்பிடியளவு கல் உப்பு போட்டு அதில் 10 நிமிடங்கள் புரொக்கோலித் துண்டுகளைப் போட்டு ஊறவைக்கவும். அடுத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து, உப்புத் தண்ணீரில் ஊறவைத்து அலசிய புரொக்கோலித் துண்டுகளை அதில் போடவும். கொதி நீரில் ஒரு நிமிடம் மட்டுமே புரொக்கோலி இருக்க வேண்டும். அதிலேயே அரை வேக்காடாக வெந்துவிடும்.

மேலே சொன்ன முறையில் புரொக்கோலியைச் சுத்தம் செய்து, அரை வேக்காடாக வேகவைத்து, புரொக்கோலித் துண்டுகளை வடித்தெடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, தட்டியப் பூண்டு, காய்ந்த மிளகாய் தாளித்து இதில் வெந்த புரொக்கோலித்துண்டுகளைப் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கினால் புரொக்கோலி பொரியல் ரெடி.

புரொக்கோலியை குருமா, சாம்பார் போன்றவற்றிலும் சேர்க்கலாம். ஆனால், இரண்டையும் சமைத்து முடித்து அடுப்பிலிருந்து இறக்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னால்தான், சுத்தம் செய்த புரொக்கோலியைச் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் புரொக்கோலி குழைந்துவிடும்.

மற்ற காய்கறிப் பொரியலுடனோ அல்லது உருளைக்கிழங்கு மசாலாவுடனோ புரொக்கோலியைச் சேர்த்து சமைக்க வேண்டும் என்றால், அவற்றைச் சமைத்து முடித்து அடுப்பிலிருந்து இறக்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னால்தான் புரொக்கோலியைச் சேர்க்க வேண்டும்” என்கிறார்கள் சமையற்கலை வல்லுநர்கள்.

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

ஞாயிறு 14 மா 2021