கனமழை: கடல்போல் காட்சியளிக்கும் வயல்வெளிகள்!

தென்காசி மாவட்டத்தில் யாரும் எதிர்பாராத மழை பெய்ததால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை நடவு செய்த வயல்கள் வெள்ளக்காடாக்கி விட்டதால் விவசாயிகள் கண்கலங்கியுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த புதன்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து ஏற்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு குதூகலத்தை ஏற்படுத்தினாலும் விவசாயிகள் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து ஏற்பட்டது.
மாவட்டத்தில் அச்சன்புதூர், கடையநல்லூர், வடகரை, இடைகால், சொக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்று முன்தினமும் பரவலாக மழை பெய்தது. சிவகிரி வட்டாரத்தில் ஊர்பகுதியிலும் மேற்குத் தொடர்ச்சி மலையிலும் பலத்த மழை பெய்து தண்ணீர் வயல்வெளிகளில் கடல்போல் தேங்கியது. இந்தப் பகுதியில் இப்போதுதான் கோடை நெல்நடவு பணிகள் நடந்துவருகிறது. நெல்நடவு செய்து நான்கு நாட்கள் கூட ஆகாத நிலையில் மழை நீர் தேங்கி நெல் நாற்றுக்களை பாழாக்கியுள்ளது.
கடந்த ஜனவரியில் இப்பகுதியில் பலத்த மழை பெய்து அறுவடை செய்ய வேண்டிய நெல்வயல்களில் மழை வெள்ளம் தேங்கி விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த துயரத்தில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒரு எதிர்பாராத மழை வந்து பெய்து விவசாயிகள் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. நஷ்டமடைந்த விவசாயிகள் மீண்டும் அரசிடம் நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
_சக்தி பரமசிவன்