நகை அடகு கடைக்கு செக்!

நகை அடகு கடைகளில் வைக்கப்பட்ட நகைகளை நீண்ட நாட்களுக்கு பிறகு வாடிக்கையாளர்கள் உடனடியாக மீட்டால், அதுகுறித்து தேர்தல் பிரிவுக்கு தகவல் அளிக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சிவன் அருள் தலைமையில், நேற்று நகை அடகு கடைகளின் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், ” தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், மக்களை கவருவதற்காக மறைமுகமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர், தேர்தல் கண்காணிப்பு குழுவினர், காவல் துறையினர் என அனைவரும் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நகை அடகு கடைகள் உரிமையாளர்களுக்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது, நகை அடகு கடைகளில் ஏற்கனவே வைக்கப்பட்ட நகைகளை மீட்பதற்காக மக்களுக்கு டோக்கன் வழங்குவது, அடையாள வில்லைகள் வழங்குவது போன்ற முயற்சிகள் நடந்து வருவதாக புகார் வந்துள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், நகை அடகு கடைகளில் வெவ்வேறு காலக்கட்டத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை கொஞ்சம், கொஞ்சமாகவோ அல்லது மொத்தமாகவோ மீட்பது தெரியவந்தாலோ அல்லது நீண்ட நாட்கள் வட்டியும், அசலும் செலுத்தாமல் இருந்த நகைக்கு உடனடியாக பணத்தை செலுத்தி நகைகளை மீட்பது தெரியவந்தாலோ அது பற்றிய விவரங்களை உடனடியாக மாவட்ட தேர்தல் பிரிவுக்கும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுக்கும் நகை அடகு கடை உரிமையாளர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற செயல்களுக்கு நகை அடகு கடை உரிமையாளர்கள், துணை போனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வினிதா